ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் தனது இரண்டாவது அவசரகால நிலை உத்தரவு மற்றும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மேலும் இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது.
அவசர நிலை மற்றும் வீட்டில் தங்கும் உத்தரவுகள் பெப்ரவரி 09-ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார்.
ஒன்ராறியோவில் கடந்த ஜனவரி 12-ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இரண்டாவது அவசர கால நிலை அறிவிப்பைத் தொடர்ந்து மாகாணத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய பயணங்கள் தவிர வீடுகளில் முடங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மாகாணம் முழுவதும் வெளிப்புறங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீடுகளில் விருந்தினர்களை அழைக்கவும் இதன்கீழ் தடை உள்ளது.
மேலும் அத்தியாவசிய தொழிலாளர்கள் தவிர அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக அபராதங்களை விதிக்கவும் அவசர நிலை மூலம் அரசுக்கு அதிகாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.