Reading Time: 2 minutes

ஒன்ராறியோவில் மாகாணம் முழுவதும் வீட்டில் தங்கும் உத்தரவை (stay-at-home order) பிறப்பிக்குமாறு ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்திய மருத்துவ நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு வைரஸ்கள் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்று நோயின் எழுச்சியைக் கட்டுப்படுத்த இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு அவா்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஒன்ராறியோ முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வரவேற்றும் அதேவேளை, தொற்று நோயைக் கட்டுக்கடுத்த மேலும் வலுவான நடவடிக்கை தேவை என ஒன்ராறியோவின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கடிதத்தில் ரொரண்டோவின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா, பீல் பிராந்தியத்தின் சுகாதார அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ மற்றும் ஒட்டாவாவின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் வேரா எட்சஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மாகாண தலைமை சுகாதார அதிகாரி டேவிட் வில்லியம்ஸுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதை ரொரண்டோ பொது சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தொற்று நோயின் தீவிர பரவல், இறப்புக்கள் மற்றும் மருத்துவமனைச் சோ்க்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அவசரமாக வீட்டில் தங்குவதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் மீண்டும் மிக வேகமாக அதிகரித்துவரும் கோவிட்19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் மற்றொரு 4 வார கால சமூக முடக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னரைப் போன்று முழுமையாக வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவுகள் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாமல் அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கையாக (emergency brake) இந்த புதிய முடக்க நிலை அமையும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

புதிய சமூக முடக்கல் அறிவித்தலில் பிரகாரம் உணவகங்களில் உட்புற பரிமாற்ற சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளும் கடுமையாக அமுலாகியுள்ளன.

மாகாணத்தில் 34 பொது சுகாதார பிராந்தியங்களிலும் நான்கு வார காலத்திற்கு முடக்க நிலை அமுலில் இருக்கும் என முதல்வர் டக் போர்ட் கூறியுள்ளார்.

புதிய முடக்க நடைமுறையின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் கடுமையான திறன் வரம்புகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சில்லறை கடைகள் 50 சதவீத திறன் வரம்பில் இயங்க முடியும், அதே நேரத்தில் பிற கடைகள் மற்றும் சில்லறை வியாபார நடவடிக்கைகள் 25 சதவீத திறனுடன் செயல்பட முடியும். தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மற்றும் ஜிம்கள் மூடப்பட்டுள்ளன.

ஒன்ராரியோ மக்கள் 5 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு குறைவானவர்கள் அவசிய தேவை கருதி ஒன்றுகூடினால் சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அத்தியாவசிய தேவை தவிர, அநாவசியமான பயணங்களை மட்டுப்படுத்துமாறு ஒன்ராறியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு, மருந்து வாங்குதல் மருத்துவ ஆலேசானை பெறுதல், பாதிக்கப்படக்கூடியவர்களுக்காக ஆதரவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக மட்டுமே வீட்டுக்கு வெளியே பயணம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

வீட்டில் தங்குவதற்கான கடும் உத்தரவை நாங்கள் அறிவிக்கவில்லை. ஏனெனில் இது சிறுவர்கள் மற்றும் பெரியவர்களிடையே கடந்த காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.

புதிய சமூக முடக்க அறிவித்தலின் கீழ் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. முழுமையாக சமூக முடக்க நிலைக்குப் பதிலாக அவசர கால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையே நாங்கள் அறிவித்துள்ளோம் எனவும் எலியட் கூறினார்.

எனினும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு வைரஸ்கள் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்று நோயின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வீட்டில் தங்கும் உத்தரவு அவசியம் என ரொரண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா பிராந்தியங்களில் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.