Reading Time: < 1 minute

சட்டவிரோத போதைப் பொருட்களை கியூபெக்கிற்குள் எடுத்துச் சென்றதாக குற்றறஞ்சாட்டப்பட்ட ஒன்ராறியோ பெண் ஒருவருக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த 53 வயதுப் பெண், அதிகாரிகள் மற்றும் விசாரணையாணர்களை ஏமாற்றும் வகையில் சுமார் பத்து பொய் அடையாளங்களைப் பயன்படுத்தி, மொன்றியல் மற்றும் ஒட்டாவாவில் உள்ள பல இடங்களுக்கு சட்டவிரோத போதைப் பொருட்களை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இலத்திரனியல் உபரணம் ஒன்றினுள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட, போதை மாத்திரை தயாரிக்கப்பயன்படும் ஹெரோயின் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்களைக் கைப்பற்றிய யேர்மன் சுங்கத் துறையினர், அது குறித்த விசாரணைகளை அடுத்து கனேடிய மத்திய காவல்துறையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

குறித்த அந்த பொதி கனடாவின் மொன்றியல் பகுதிக்கு விலாசமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து குறித்த அந்த பொதி தொடர்பில் விசாரணைகனை முன்னெடுத்த கனேடிய மத்திய காவல்துறையினர், குறித்த அந்தப் பெண் தபால் நிலையம் சென்று குறித்த அந்தப் பொதியைக் பெற்றுக் கொண்டதுடன், மேலும் இரண்டு வெவ்வேறு தபால் நிலையங்களுக்குச் சென்று போதைப் பொருட்கள் அடங்கிய பொதிகளைப் பெற்றுக் கொண்டதை அவதானித்துள்ளனர்.

அதனை அடுத்து ஒன்ராறியோவின் வூட்லான்ட் பகுதியைச் சேர்நத குறித்த அந்தப் பெண்ணைக் கைது செய்து பின்னர் விடுவித்த காவல்துறையினர், சில வாரங்களின் பின்னர் 2018 நவம்பரில் வேறு நபர்களின் பெயரில் களஞ்சிய வசதியை வாடகைக்கு பெற்றிருந்த இடங்களில் தேடல் மேற்கொண்டு அங்கேயும் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.