ஒன் எரைவல் விசா (இணையவழி வருகை- On-arrival visa) முறைகாரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அந்நியச் செலவாணியை பெற்றுக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
நாட்டிற்கு வருகைதரும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். இதுநாட்டிற்கும் அவப்பெயராகும்.
இலங்கைக்கு வருவதற்கான விசா அனுமதியை பெறுவதற்காக விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் 110 அதிகாரிகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.
அரசாங்கம் குறித்த வெற்றிடங்களையேனும் நிரப்ப வேண்டும் வெற்றிடங்களை நிரப்பும் போதே சேவையை இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியும். நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாபயணிகளிடம் 50 டொலர் அறவிடப்படுகின்றது” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க”இந்த விடயம் தொடர்பாக தாம் அமைச்சரவையில் நேற்று கலந்துரையாடியதாகவும், தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ”மாலைதீவில் அந்நிய செலாவணி குறைவடைந்த காரணத்தினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அங்கு செல்லும் சுற்றுலாபயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர் எனவும், இதன்காரணமாக ஒன் எரைவல் விசா முறைமையினை இலகுபடுத்த தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.