ஒன்ராறியோ மாகாணம் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலையில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்ராறியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாகாண முதல்வர் டக் போர்ட் எச்சரித்துள்ளார்.
ஒவ்வொரு நொடியும் மாகாண மக்கள் கடும் முன்னெச்சரிக்கைகளுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ஒன்ராறியோவில் புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. திங்கட்கிழமை மாகாணத்தில் பதிவான 1,489 தொற்று நோயாளர்களில் கணிசமான அளவானோர் கவலையளிக்கும் புதிய வகை வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து மாகாணத்தில் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸை சந்தித்துப் பேசவுள்ளதாக முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட ஒவ்வொரு நொடியும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு வழிமுறைகளைப் பேண வேண்டும். முக கவசங்களை அணிந்து, கட்டாயம் சமூக இடைவெளி பேண வேண்டும். நாங்கள் மிகவும் எச்சரிக்கையான இந்த நிலையை சமாளித்து முன்னேற வேண்டும் எனவும் டக் போர்ட் குறிப்பிட்டார்.
ஒன்ராறியோ மாகாண மருத்துவமனைகள் முதன்முதலில் மாகாணம் தொற்று நோயின் மூன்றாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக திங்கட்கிழமை அறிவித்தது.
புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை செங்குத்தாக அதிகரித்து வருவதுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தொற்று நோயாளர் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.