எல் நினோ கனடாவின் குளிர் காலத்தை பாதிக்கக்கூடும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட தீவிரமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு ஆகும். ஆனால், அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கக்கூடும்.
அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வெறும் தகவலாக அதைக் குறித்து அறிந்துகொண்டவர்கள், அதன் தாக்கத்தை கண்ணால் பார்த்துகொண்டிருக்கிறோம்.
இந்நிலையில், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவை, எல் நினோக்களின் காட்ஸில்லா என அழைக்கிறார்கள்.
அதாவது, இம்முறை நிகழும் எல் நினோ பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.
ஏற்கனவே, எல் நினோ காரணமாக ஏற்பட்ட மழையால், சிலி நாட்டில் கடந்த வார இறுதியில் 10 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மத்திய அமெரிக்காவில், ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் பனாமா ஆகிய பகுதிகளில் வறட்சி காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பனாமா கால்வாயில் போதுமான தண்ணீர் இல்லாததால் கப்பல் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.
கனடாவைப் பொருத்தவரை, எல் நினோவின் தாக்கத்தால், குளிர்காலத்தின் அளவு குறைவாக இருக்கும் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.
குறைவான பனி, மேற்கில் அதிக மழை, அதனால் வசந்த காலத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புகள், சீக்கிரமாக காட்டுத்தீ உருவாகும் அபாயம் மேலும் கூடுதல் வறட்சி ஆகியவற்றை கனடா எதிர்கொள்ள நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.
பரந்த, வளமான புல்வெளி சமவெளிகளில் பயிர்களை வளர்த்து, கால்நடைகளை வளர்க்கும் வழக்கம் கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை ஏமாற்றம் ஏற்படலாம்.
ஆக மொத்தத்தில், எல் நினோவால் அதிகரித்த வெப்பம் காரணமாக 2024ஆம் ஆண்டுதான் வரலாற்றிலேயே அதிக வெப்பம் கொண்ட ஆண்டு என்றார்கள்.
ஆனால், இம்முறை உருவாகியுள்ள எல் நினோவால், 2027ஆம் ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கலாம் என்கிறார்கள் காலநிலை ஆய்வாளர்கள்.




