ஒன்ராறியோ லண்டன் பகுதியின் கிழக்கே, எரிவாயுக் குழாய் மீது மின்னல் தாக்கியதன் காரணமாக, 60 வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டதாக ஒன்ராறியோ மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோ Tillsonburg பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த மின்னல் தாக்கம் சம்பவித்துள்ளது.
இந்த மின்னல் தாக்கம் காரணமாக குறித்த அந்த எரிவாயு வினியோகக் குழாய் பலத்த சேதத்திற்கு உள்ளானதாகவும், பெருமளவான எரிவாயு அதிகலிருந்து வெளியேறியதாகவும், பல வீடுகள் மற்றும் நிலக்கீழ் கால்வாய் ஆகியவற்றில் எரிவாயு காற்றில் கலந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
காற்றில் எரிவாயுவின் செறிவு அதிகமாக இருந்ததன் காரணமாக, முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த வட்டாரத்தில் உள்ள 60 வீடுகளில் இருந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த எரிவாயுக்குழாய் மீளச் சீரமைக்கப்படும் வரையில், அருகே உள்ள சமூக மண்டபத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.