ஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்யா, தனது பிரதான ஆயுதமாக எரிசக்தி வளத்தை பயன்படுத்துவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்வதனை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துகின்றது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் நோக்கில் ரஷ்யா எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தி வருகின்றது.
எரிசக்தி வளம் தொடர்பில் பல்வேறு மாற்று வழிகள் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவிற்கு சில வகை எரிபொருள் வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் மத்திய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பா ரஷ்யாவின் எரிபொருளுக்காக தொடர்ந்தும் தங்கி இருப்பது பொருத்தமற்றது எனவும் ஐரோப்பா எரிபொருளுக்காக ரஷ்யாவிற்கு வழங்கும் பில்லியன் கணக்கான டாலர்களை, ரஷ்யா உக்கிரேனுக்கு எதிரான சட்டவிரோத போருக்காக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நோவா ஸ்கோட்டியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.