Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடா விமான நிறுவனம், தங்களது ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

தனது 38,000 ஊழியர்களில் குறைந்தபட்சம் 20,000 ஊழியர்களை இது பாதிக்கும் எனவும், இந்த எண்ணிக்கை 22,800 வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்க நடவடிக்கை எதிர்வரும் மாதம் ஜூன் 7ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து எயார் கனடா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு பறந்த திறனில் சுமார் ஐந்து சதவீதத்தில் தற்போது பறந்து வருகின்றது. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் 25 சதவீதம் வரை உயர முடியும்.

தொற்றுநோய் திட்டமிடப்பட்ட விமானங்களை 95 சதவீதம் குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. சாதாரண போக்குவரத்து எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை

எனவே, முன்னறிவிப்புகளுடன் ஒத்துப்போகும் எங்கள் நடவடிக்கையை கணிசமாகக் குறைக்க இன்று நாங்கள் மிகவும் கடினமான முடிவை எடுத்தோம், இது வருந்தத்தக்க வகையில் எங்கள் பணியாளர்களை 50 முதல் 60 சதவீதம் குறைப்பதாகும்’ என தெரிவித்துள்ளது.

எயார் கனடா, கடந்த மார்ச் மாதத்தில் தனது பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதியை செலவுக் குறைப்பு திட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

கனேடிய அரசாங்கம் ஊதிய மானியத் திட்டத்தை அறிவித்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 16,500 விமான பணிப்பெண்கள், பொறியிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகவர்களை இது மீண்டும் பணியில் அமர்த்தியது. ஆனால் ஜூன் 6ஆம் திகதியை கடந்தும் இந்த திட்டத்தை பராமரிக்க அரசு உறுதியளிக்கவில்லை. இந்தநிலையிலேயே எயார் கனடா இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.