Reading Time: < 1 minute

கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோ, கட்டாய தடுப்பூசி சான்று திட்டத்துக்கான எதிர்ப்பைக் கைவிட்டு, அதனைக் ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

பார்கள், உணவகங்கள், இரவு விடுதிகளுக்குச் செல்லவும் உட்புற விளையாட்டுக்களை பார்வையிடவும் முழு தடுப்பூசி பெற்ற டிஜிட்டல் சான்று தேவை என மாகாண அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 22 முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும்.

ஆரம்பத்தில் இந்த யோசனை பிளவுபட்ட சமுதாயத்தை உருவாக்கும் எனக் கூறி ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் நிராகரித்தார். எனினும் டெல்டா உரு திரிபு வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பூசி உறுதிச் சான்றிதழ் அவசியம் உணரப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

மீண்டும் வேகமெடுக்கும் தொற்று பரவலைத் தடுக்க நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மருத்துவமனைகளின் பராமரிப்புத் திறனைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் ஒரு முடக்க நிலைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்கு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினார்.

76% ஒன்ராறியர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் இதுவரை பெற்றுள்ள நிலையில் இவ்வாறான அறிவிப்பை முதல்வர் டக் போர்ட் வெளியிட்டுள்ளார்.

மீதமுள்ள ஒன்ராறியர்கள் விரைவாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.

கட்டாய தடுப்பூசி அட்டைத் திட்டத்தை செயற்படுத்துவதை நாங்கள் உண்மையாக விரும்பவில்லை. ஆனால் நிலைமை அதனைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.

இதேவேளை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசித் திட்டத்தை அமுல்படுத்தியதை எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கடுமையாக விமர்சித்து வருகிறது. கூட்டாட்சி தோ்தல் பிரச்சாரத்தில் இந்தப் பிரச்சினையை கன்சர்வேடிவ் முன்னிலைப்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில் கன்சர்வேடிவ் ஆட்சியிலுள்ள ஒன்ராறியோ இந்தத் திட்டத்தை ஏற்று அமுல்படுத்த தீா்மானித்துள்ளது.

இதற்கிடையில் தொற்றுநோய்க்கு எதிராக போராட்டத்தை அரசியலாக்க நான் விரும்பவில்லை. அரசியல் நலன்களுக்காக அதில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்யப்போவதில்லை. மற்ற தலைவர்களைப் போலல்லாமல் இந்த விடயத்தில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பேன் என நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ கூறினார்.

எனினும் கட்டாய தடுப்பூசி அட்டைக்குப் பதிலாக அடிக்கடி, அதிகளவு சோதனைகள் என்ற திட்டத்தை பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் பரிந்துரைக்கிறது. ஆனால் மாகாணங்கள் தங்கள் நிலைமைக்கு ஏற்ப எடுக்கும் முடிவுகளை நான் மதிக்கிறேன் என கன்வர்வேடிவ் கட்சித் தலைவர் எரின் ஓ டூலே தெரிவித்தார்.

இதேவேளை, கனடாவில் சேவை பெற தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்கிய நான்காவது மாகாணமாக ஒன்ராறியோ உள்ளது.

கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான கியூபெக் நேற்று புதன்கிழமை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா ஆகியவையும் கட்டாய தடுப்பூசி அட்டைத் திட்டத்தை அறிவித்துள்ளன.