ரஷ்யப் போருக்குத் தப்பி ஓடி வரும் உக்ரைன் நாட்டவர்களை இரு கரம் நீட்டி வரவேற்க இருப்பதாக ஒன்ராறியோ பிரீமியர் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, தொழிலாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மாகாணத்துக்கு உதவ, உக்ரைனியர்களின் திறமைகள் வரவேற்கப்படும் என்றார்.
ரஷ்ய ஊடுருவலுக்குத் தப்பி உக்ரைனிலிருந்து ஓடி வருவோர், ஒன்ராறியோவில் எளிதாகக் குடியமர்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெடரல் அரசு செய்யவேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் அங்கிருந்து தப்பியோடி வரும் மக்களுக்கு உதவுவதற்காக விரைந்து செயல்படவேண்டும் என்று கூறியதுடன், அவர்களை வரவேற்பதில் ஒன்ராறியோ முன்னணியில் நிற்கும் என்றும் கூறியுள்ள Ford, கடினமாக உழைக்கும் உக்ரைனியர்களுக்கு இங்கு எப்போதுமே வரவேற்பு உண்டு என்றார்.
அத்துடன், தொழிலாளர் துறை அமைச்சரான Monte McNaughton, தான் புலம்பெயர்தல் துறை அமைச்சருடன் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும், உக்ரைன் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகளை விரைவாக ஒன்ராறியோவில் குடியமர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அவரைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அகதிகளுக்காக ஒன்ராறியோ நிறுவனங்கள் 20,000 பணிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.