Reading Time: < 1 minute

ஈரானில் 2020ஆம் ஆண்டு பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டொலர்களை வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என கனடா – ஒன்ராறியோ மாகாண உயர் நீதிமன்றம் ஈரானுக்கு உத்தரவிட்டுள்ளது.

இறந்தவர்களின் மனைவிமார், சகோதரர்கள், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த இழப்பீட்டை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஈரானிடம் இருந்து எப்படி இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும்? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டு தெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பி.எஸ் 752 என்ற உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.

பின்னர் அமெரிக்காவின் ஏவுகணை எனக் கருதி விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் மன்னிப்பு கோரியது.

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்தவர்களின் 55 பேர் கனடாவைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் 35 பேர் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான ஈரானுக்கு எதிராக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அத்தீா்ப்பிலேயே இறந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு 107 மில்லியன் கனடா டொலர்களை வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்க வேண்டும் என ஒன்ராறியோ மாகாண உயர் நீதிமன்றம் ஈரானுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஈரான் தரப்பு வாதங்களை முன் வைக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.