Reading Time: < 1 minute

இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா ரோயல் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட பாதுகாப்புக் குழு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வந்திருந்தது.

உயர்மட்ட அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய குறித்த குழு, அமெரிக்க விமானப்படையின் இரண்டு சிறப்பு விமானங்களில் நாட்டை வந்தடைந்தது.

பிராந்திய பாதுகாப்பு, இலங்கை இராணுவத்தில் சீர்திருத்தங்கள், கடல்சார் கள விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இக்குழு இலங்கைக்கு வந்திருந்தது.

இந்த விஜயம் இலங்கையில் ஒரு இராணுவ தளத்தை அமைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்ற ஊகத்தை தூண்டியது.

இந்நிலையில் நேற்று இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இலங்கையில் இராணுவத் தளத்தை அமைக்கும் நோக்கம் தமது நாட்டுக்கு இல்லை என கூறியுள்ளார்.

அத்துடன், சோஃபா ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள் மதிப்பீடு செய்யவோ அமெரிக்கா எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.