Reading Time: < 1 minute

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கனடா அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்த நியமனம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை பலவீனமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான கனடிய தூதரகம், இவ்விடயம் தொடர்பில் தாம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள சவேந்திர சில்வா, புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதை, சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்து வருகின்றன.

கனடா மட்டுமன்றி, இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஜேர்மனிய தூதரகங்களும், இந்நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், புதிய இராணுவ தளபதியை நியமிக்கும் முடிவு, இறைமையுள்ள இலங்கையின் ஜனாதிபதி எடுத்த முடிவு என தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, அதில் வெளிநாட்டு தூதுவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளது.