இன்று காலை வேளையில் அஜெக்ஸ் பகுதியில் காவல்துறையினரின் வீதித் தடுப்புச் சோதனையிலிருந்து தப்பியோடிய இரண்டு 18வயது இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்று அதிகாலை 12:05 அளவில், Westney வீதிப் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் சென்ற வாகனம் ஒன்றை மறிக்க முயன்றதாகவும், எனினும் அது காவல்துறையினரை மதிக்காது அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகவும் டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பித்துச் சென்ற அந்த கறுப்பு நிற BMW வாகனத்தின் யன்னல் ஊடாக ஏதோ பொருள் வீசப்பட்டதனை அவதானித்து, அதனை ஆராய்ந்த போது அது கொக்கெய்ன் வகை போதைப் பொருள் என்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை வாகனம் நகர்ந்துகொண்டிருக்கும் போதே, அதிலிருந்து அதன் சாரதியும் மேலும் ஒருவரும் இறங்கித் தப்பியோடிச் சென்றதாகவும், நகர்ந்து சென்ற வாகனம் கவிழந்து உருண்டு வீதியோர வேலியில் மோதி அருகே இருந்த காட்டினுள் வீழ்ந்ததாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தப்பியோடிச் சென்றவர்களைத் துரத்திய காவல்துறையினர், வாகனத்தின் சாரதியைப் பிடிக்க முடியவில்லை என்றும், மற்றையவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அஜெக்ஸ் பகுதியைச் சேர்ந்த கியோன் நைட் ஃபோர்டே என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் மீது தடை செய்யப்பட்ட பொருளை வைத்திருந்தமை, கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் தாக்குதல் நடாத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தப்பித்துச் சென்றுள்ள வாகனத்தின் சாரதியை இன்னமும் தேடி வருவதாகவும், அவர் குறித்து தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும் தேடப்படும ்நபரின் அடையாளங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.