Reading Time: < 1 minute

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான ராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டதாக கனடா தெரிவித்துள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் ராஜதந்திர முரண்பாட்டு நிலைமைகளை தொடர்ந்து இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் இந்தியாவில் இருந்து ராஜதந்திரிகள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

சீக்கிய ஆன்மீக தலைவர் ஹார்தீப் சிங் படுகொலை சம்பவம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவாகியது.

கனடாவிற்கான இந்திய ராஜதந்திரிகள் சிலரை வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் கோரியிருந்தது.

அதேபோன்று இந்தியாவில் கடமையாற்றி வந்த சுமார் 41 ராஜதந்திரிகளை கனடாவிற்கு மீள அழைத்துக் கொள்ளுமாறு இந்தியா அறிவித்திருந்தது.

ராஜதந்திரிகளை மீள அழைக்காவிட்டால் அவர்களுக்கான ராஜதந்திர வரப்பிரசாதங்கள் வழங்கப்படாது என இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான ஒரு பின்னணியில் இந்தியாவில் கடமையாற்றி வந்த பெரும் எண்ணிக்கையிலான கனடிய ராஜதந்திரிகள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.