இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் குறித்து நாடாளுமன்றமும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் முன்மொழிவை வழங்கும் என இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் வாகனங்களையும் கொண்டு செல்ல தரைவழி பாதையை அமைக்க வேண்டிய அவசியம் குறித்து இந்தியத் தரப்பு முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும், அது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.