ஆராய்ச்சி பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு அரசு 75 சதவீத நிதியை வழங்கும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன.
இந்த பட்டியலில் கனடாவும் தனது பெயரை இணைத்துக்கொண்டுள்ளது. எனினும், அரசின் நிதி நெருக்கடியால் ஆராய்ச்சி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘உயிர்காக்கும் புற்றுநோய் சிகிச்சைகள் முதல் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சுத்தமான தொழில்நுட்பங்கள் வரை, கனடாவில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி ஊழியர்கள் நமது நல்வாழ்வையும் நமது பொருளாதாரத்தையும் மேம்படுத்த கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமை படைப்புகளை உருவாக்குகின்றனர்.
இந்நிலையில் தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையால் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வேலையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு பின்னர் அவர்கள் தங்கள் பணியை தொடர, தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும். ஆராய்ச்சியாளர்கள் பணி தற்போது நிறுத்தி வைத்திருந்தாலும் அரசு அவர்களுக்கு தேவையான 75 சதவீத நிதியை வழங்கும்.
கனடாவில் உள்ள ஆராய்ச்சி ஊழியர்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளின் ஆதாரமாக இருக்கிறார்கள், அந்த ஆராய்ச்சிகள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நமது பொருளாதாரத்தை இயக்கவும் உதவுகின்றன. அவ்வாறு நாம் பெற்றிருப்பது நமக்கு அதிர்ஷ்டம். இன்று, கனேடிய பல்கலைக்கழகங்களையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறோம் இந்த கடினமான சூழ்நிலையின் மூலம் ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சித் திறனைத் தக்க வைத்துக் கொள்ள தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து கொடுப்போம்’ என கூறினார்.