Bowmanville மற்றும் Whitby பகுதி ஊடாக ஆயுததாரி ஒருவரை உலங்குவானூர்தி உதவியுடன் துரத்திச் சென்ற சம்பவம் புதன்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
Clarington பகுதி, Rundle வீதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக புதன்கிழமை இரவு 10:15 அளவில் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அங்கே விரைந்ததாகவும், காவல்துறையினரின் வாகனம் அந்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அண்மித்த போது, அது அங்கிருந்து வேகமாகத் தப்பித்துச் சென்றதாகவும், அதனை அடுத்து அங்கே உலங்குவானூர்தியும் அழைக்கப்பட்டதாகவும் டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அந்த வாகனத்தை இனங்கண்ட உலங்குவானூர்தி, வானில் இருநது அதனைத் தொடர்ந்து அவதானித்தவாறு நகர்ந்த வேளையில், வீதியில் அதிகாரிகளும் குறித்த தூர இடைவெளியில் வாகனத்தைப் பின்தொடர்ந்துள்ளனர்.
Bowmanville பகுதி ஊடாகச் சென்ற வானகம், பின்னர் நெடுஞ்சாலை 401இல் கிழக்கு நோக்கிப் பயணித்து, பின்னர் நெடுஞ்சாலை 57இல் வடக்கு நோக்கிச் சென்றுள்ளது. சில வேளைகளில் குறித்த அந்த வாகனம், எதிர்த்திசையில் வாகனங்கள் பயணிக்கும் வழித்தடங்கள் ஊடாகவும் சென்றதனை உலங்குவானூர்தியில் சென்ற அதிகாரிகள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை நெடுஞ்சாலை 7 பகுதியில், சாலையில் தடுப்புக்களையும், வாகனச் சக்கரத்தினை செயலிழக்கச் செய்யும் வகையிலான கூர்மையான பொறிகளையும் பதித்த அதிகாரிகள், குறித்த அந்த வாகனத்தினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வாகனத்தின் டயர்களில் காற்றுப் போய்விட்ட நிலையில், உலோக “றிம்”களில் பொறிபறக்கும் வகையில் நகர்ந்து சென்ற வாகனம் ஒருகட்டத்தில் நிறுத்தத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் நூறு கிலோமீடடர் தூரத்திற்கு இந்த வாகனம் துரத்திச் செல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கு சுமார் ஒரு மணி நேரம் சென்றதாக கூறப்படுகிறது.
வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதற்குள் இருந்து .22 கலிபர் றிவோல்வர் ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து 49 வயதான ஜோர்ஜ் மக்ஸ்வெல் என்பவரைக் கைது செய்துள்ள அதிகாரிகள், அவர் மீது தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.