Reading Time: < 1 minute

கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்டு 10ம் திகதிவரையான தரவுகளின் அடிப்படையில் ஆயிரம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்டு 10ம் திகதி வரையில் கனடாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்ணிக்கை 1008 என தெரிய வந்துள்ளது. ஒன்ராறியோவில் மட்டும் 478 பேர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கியூபெக்கில் 425 பேர்களுக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 85 பேர்களுக்கும், ஆல்பர்ட்டாவில் 16 பேர்களுக்கும், சஸ்காட்செவன் மற்றும் யூகோன் பகுதிகளில் தலா இருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சைக்கு பின்னர் சில வாரங்களில் முழுமையாக குணமடைவார்கள் என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், சிலருக்கு நோய்த்தொற்று தீவிரமடைந்து மரணம் ஏற்படும் அபாயமும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

குரங்கம்மை தொற்றின் அறிகுறிகளில் வலிமிகுந்த சொறி 14 முதல் 28 நாட்கள் வரை நீடிக்கும். அத்துடன் காய்ச்சல், குளிர், தலைவலி, வீங்கிய நிணநீர் கணுக்கள், தசை வலி, மூட்டு வலி, முதுகு வலி அல்லது சோர்வு ஆகியவையும் சேர்ந்து ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும், சுகாதாரத்துறையின் ஆலோசனையின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுவரை 87 நாடுகளில் மொத்தம் 31,800 பேர்களுக்கு குரங்கம்மை தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 23ம் திகதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கம்மை தொற்றானது உலகளாவிய சுகாதார அவசரநிலை என குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, ஒன்ராறியோவில் இதுவரை 20,000 பேர்கள் குரங்கம்மை தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கிலும் தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்தி வருவதாக சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.