கனடா அதன் ஜி-20 கூட்டணி நாடுகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் நேரடியாகச் சென்றடைவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்தது.
அத்துடன், நேரடியாக மக்களுக்கு உதவிகள் சென்று சோ்வதற்கு ஒத்துழைக்குமாறு புதிய தலிபான் ஆட்சியாளர்களுக்கு கனடா உள்ளிட்ட நாகள் அழுத்தத்தை பிரயோகித்தன.
நேற்று இடம்பெற்ற ஜி-20 நாடுகளின் மெய்நிகர் உச்சி மாநாட்டின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சக ஜி 20 தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதித்தனர்.
நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது ஆப்கானுக்கான 1.4 பில்லியன் டொலர் உதவித் தொகையை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானுக்கு உதவும் சர்வதேச அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் டொலர் உதவியை கனடா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதனை விட புதிய உதவித் திட்டங்கள் கனடாவால் அறிவிக்கப்படவில்லை.
கனடா மற்றும் அதன் கூட்டாளிகளால் வழங்கப்படும் நிதி உதவி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது. எந்தவொரு உதவித் திட்டங்களும் தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசிடம் நேரடியாகக் கையளிக்கப்டாது எனவும் தீா்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் 40,000 ஆப்கானியர்களுக்கு புகலிடக் வழங்கும் கனடாவின் உறுதிமொழியை பிரதமர் ட்ரூடோ மீண்டும் உறுதி செய்தார்.
அத்துடன், அனைத்து ஆப்கானியர்களின், குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க தலிபான்களை வலியுறுத்துவதில் ஏனைய தலைவர்களுடன் ட்ரூடோவும் இணைந்துகொண்டார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நீடித்த அமெரிக்காவின் இராணுவத் தலையீடு முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் மத்திய வங்கி சொத்துகளில் பில்லியன் கணக்கானவை முடக்கப்பட்டுள்ளன. அத்துடன், சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதிக்கான அணுகலை நிறுத்திவிட்டன.
வங்கிகளில் பணம் இல்லாததால் ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அத்துடன், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நெருக்கடி குறைந்தது 18 மில்லியன் மக்களை பாதிக்கிறது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என எச்சரித்துள்ள ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், அங்கு பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டுமென கடந்த இரு நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்தார்.
பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை ஏற்க மறுக்கும் தலிபான்களில் செயற்பாடு அவர்களின் கனவுகளை சிதைக்கும். பெண்கள் வேலைக்குச் செல்வதை தலிபான்கள் தடுத்தால் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆப்கான் பொருளாதாரத்தை சீரமைக்கவும் மனிதாபிமான நெருக்கடிகளைத் தவிர்க்கவும் ஏதுவாக அங்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு உலக நாடுகளை வலியுறுத்துகிறேன் எனவும் அவா் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே கனடா அதன் ஜி-20 கூட்டணி நாடுகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் நேரடியாக வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து நேற்று ஆராய்ந்ததுடன், உதவித் தொகுப்புக்களும் அறிவிக்கப்பட்டன.