ஆப்கானிஸ்தானில் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக்கொண்டு கனேடியப் படைகள் முழுமையாக வெளியேறின.
இந்நிலையில் சில கனேடியர்கள் மற்றும் கனடாவின் ஆப்கானிய கூட்டாளிகள் இன்னமும் காபூலில் சிக்கி தவிக்கின்றனர் என இராணுவ அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து 3,700 கனேடியப் படையினர் அவசரமாக நாடு திரும்பினர். தொடர்ந்து குறைந்தளவான படையினரே மீட்புக் பணிகளில் அமெரிக்கா உள்ளிட்ட படையினரோடு இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் காபூலில் நேற்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கனேடியப் படைகள் ஆப்கானில் தங்கள் நடவடிக்கைளை நிறுத்திக்கொண்டு முழுமையாக வெளியேறின.
இதேவேளை, தற்போது ஆப்கானிஸ்தானில் எத்தனை கனேடியர்கள் இருக்கிறார்கள்? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கனடா இராணுவ ரீதியான நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு முழுமையாக வெளியேறிவிட்டபோதும் ஆப்கான் மக்களுடனான எங்கள் உறவுகள் முடிந்துவிடவில்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
வரும் மாதங்களில் கனடா தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகளைக் கண்டறியும் எனவும் அவா் தெரிவித்தார். கனடாவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு செப்டம்பர் 20 ஆம் திகதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் 20,000 ஆப்கானியர்களுக்கு கனடா அடைக்கலம் வழங்கும் என ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற கனடா விரைவாக செயல்படவில்லை என பிரதமர் ட்ரூடோ மீது எதிர்க்கட்சிகள் தோ்தல் பிரச்சாரங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.