கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதனை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பரபரப்பாக வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில், இந்திய பிரதமரும் தனது பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், தனது டுவிட்டர் பதிவிலும் அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது டுவிட் பதிவில், “ஜனநாயகத்தின் மீதான அர்ப்பணிப்பு, கௌரவங்கள் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவைகளால் இந்தியாவும், கனடாவும் இணைக்கப்படுகின்றன. மீண்டும் பிரதமராகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எனது வாழ்த்துக்கள். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
338 உறுப்பினர்களை கொண்ட கனடா மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது.
லிபரல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் சிறு கட்சிகளுடன் இணைந்து ஜஸ்டின் ட்ரூடோ கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளார். இந்த தேர்தல் வெற்றியை லிபரல் கட்சியினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கனடா பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.