கனடாவில் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முதல் மரணம் பதிவாகியுள்ளது.
ஒன்ராறியோவில் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி பெற்ற ஒருவர் அரிய இரத்த உறைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியே பொது சுகாதார இணை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் நேற்று இதனை உறுதிப்படுத்தினார்.
உயிரிழந்த 40 வயதான நபர் ஏப்ரல் மாத இறுதியில் அஸ்ட்ராசெனெகா முதல் தடுப்பூசியைப் பெற்றார். இதன் பின் இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணத்துக்கான உறுதியான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் டாக்டர் பார்பரா யாஃப் கூறினார்.
அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியின் முதல் தடுப்பூசியை இனி வழங்கப்போவதில்லை என இந்த மாத தொடக்கத்தில் ஒன்ராறியோ, அறிவித்தது.
தடுப்பூசி போட்ட சிலருக்கு அரிதான மற்றும் அபாயகரமான இரத்த உறைவு சிக்கல் அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எனினும் தடுப்பூசி போட்ட 6 இலட்சம் பேரில் ஒருவருக்கே மிக அரிதாக இவ்வாறான பாதிப்பு அவதானிக்கப்பட்டதாக கனேடிய தலைமை சுகாதார பாதுகாப்பு மற்றும் அவசரகால தயாரிப்பு அதிகாரி டாக்டர் ஜெசிகா ஹாப்கின்ஸ் கூறினார்.
வெள்ளிக்கிழமை மாகாணம் இரண்டாவது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி யின் பயன்பாட்டை மீண்டும் தொடங்குவதாகக் கூறியது. இருப்பில் உள்ள தடுப்பூசிகள் மே 31 காலாவதியாகவுள்ள நிலையில் அதற்கு முன்னர் முதல் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரண்டாவது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.