Reading Time: < 1 minute

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தூண்டிவிட்டதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் குற்ற விசாரணை என்பது நாட்டின் வரலாற்றில, உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட வேட்டையின் மற்றொரு கட்டம் என ட்ரம்ப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, அவர் ஆற்றிய உரை மற்றும் வெளியிட்ட பதிவுகளே வன்முறைக்கு காரணமென குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்பிரகாரம் செனட் சபையில், குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 7 பேர் உட்பட 57 பேர் ட்ரம்ப்பைத் தண்டிக்க வேண்டும் என வாக்களித்த அதேவேளை அவருக்கு ஆதரவாக 43 பேர் வாக்களித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பான விசாரணையில் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காமையினால் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.