கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனேடிய பிரதமர் காரணமில்லாமல் குற்றம் சாட்டவில்லை என கனேடிய முன்னாள் உளவுத்துறை தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வாழும், கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட இந்திய வம்சாவளியினர் ஒருவரைக் கொல்ல, கூலிப்படையினர் ஒருவரை அணுகியதாக இந்தியர் ஒருவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குர்பத்வந்த் சிங் பன்னும் என்னும் அந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த நபரைக் கொல்ல, இந்தியரான நிகில் குப்தா (52) என்பவர், கூலிப்படையைச் சேர்ந்த ஒருவரை அணுகியுள்ளார்.
ஆனால், உண்மையில் அவர் கூலிப்படையினர் அல்ல, அமெரிக்க ரகசிய பொலிசார். அதைத் தொடர்ந்து செக் குடியரசில் வைத்து குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை துவங்க உள்ளது. குப்தாவை இந்தியாவிலிருந்து அரசு ஊழியர் ஒருவர் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூலிப்படையினராக நடித்த அமெரிக்க ரகசிய பொலிசாரிடம், கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜரும் தங்கள் இலக்குகளில் ஒருவராக இருந்ததாக குப்தா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கனேடிய அமெரிக்கரான பன்னும் கொலை முயற்சி தொடர்பாக இந்தியரான நிகில் குப்தா கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்து கனேடிய முன்னாள் உளவுத்துறை இயக்குநரான Ward Elcock என்பவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
கனேடியர் ஒருவர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பாரென்றால், நிச்சயம் அதற்குப் பின்னால் வலுவான ஆதாரம் இருக்கக்கூடும் என தான் எண்ணியதாகவும், தற்போது கனேடிய அமெரிக்கர் ஒருவரைக் கொல்ல இந்தியர் ஒருவர் முயன்றதாக வெளியாகியுள்ள செய்தி அதை உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.