Reading Time: < 1 minute

தொற்றுநோயை அடுத்து மூடப்பட்டுள்ள அமெரிக்கா -கனடா எல்லையை மீளத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

எல்லையை எப்போது மீளத் திறக்கலாம்? என்பது குறித்து மூத்த அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளதாக கூட்டாட்சி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்கள் இரு நாடுகளுக்கும் இடையில் கட்டுப்பாடின்றிப் பயணங்களை மேற்கொள்ள அனுமதிப்பது குறித்தும் கனேடிய அரசு ஆராய்ந்துவருகிறது.

கோவிட் 19 தொற்று நோய் பரவலை அடுத்து ஒரு வருடத்துக்கு மேலாக அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக கனடா – அமெரிக்க எல்லை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரு நாடுகளிலும் கணிசமான அளவினர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் எல்லைகளை மீளத் திறப்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேரின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜேம்ஸ் குட்மோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர் பிளேர் அமெரிக்க சகாக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். எல்லையின் இருபுறமும் உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குட்மோர் கூறினார்.

உலகின் மிக நீளமான அமெரிக்கா- கனடா சர்வதேச எல்லை மார்ச் 2020 முதல் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி மற்றும் வான் வழி போக்குவரத்துக்கள் வியத்தகு முறையில் குறைந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் இரு நாடுகளில் சுற்றுலா மற்றும் விமானத் துறைகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளன.

இந்நிலையில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு படிப்படியாகத் திறக்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இது குறித்து அவசரமாக முடிவுகள் எடுக்கப்படமாட்டது எனவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கனேடியர்களில் 34.1% பேர் இதுவரை ஒற்றை கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதேநேரம் 2.7% பேர் மட்டுமே முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

அதேநேரம் அமெரிக்கர்கள் 46.6% பேர் ஒற்றைத் தடுப்பூசியையும் 35.8% பேர் இரண்டு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளனர்.

பெரும்பாலான கனேடியர்களுக்கு செப்டம்பர் வரை முழுமையாக தடுப்பூசி போட வாய்ப்பில்லை என பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.