Reading Time: < 1 minute

ஹெய்ட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் அருகே ஆயுதக் கும்பலால் அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 16பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்களில் 15 அமெரிக்கர்களும் ஒரு கனேடியரும் அடங்குகின்றனர் என அமெரிக்க மிஷனரி அதன் உத்தியோகபூா்வ இணையதளத்தில் உறுதி செய்துள்ளது.

அனாதைச் சிறுவர் இல்லமொன்றுக்கு பேருந்தில் சென்று திரும்பியவேளை இவா்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஹைட்டி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கடத்தல் சட்பவம் குறித்த விவரங்களை அறிந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கனடா பிரஜை ஒருவரும் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து ஆராய்ந்து வருவதாக கனேடிய வெளிவிவகார பிரிவும் தெரிவித்துள்ளது.

மிரட்டில் பணம் பறிக்கும் நோக்கில் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் ஹெய்ட்டியில் அடிக்கடி இடம்பெறுகின்றன.அதிகளவு ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் பட்டியலில் ஹெய்ட்டி முன்னணியில் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஹெய்ட்டி ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் கொல்லப்பட்டதிலிருந்து, அங்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு நிலை மோசமாகியுள்ளது. சாதாரண மக்கள் உயிர் பிழைப்பதற்காக தினசரி போராட வேண்டியுள்ளது.

இதேவேளை, இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து ஹெய்ட்டி நீதி அமைச்சு மற்றும் பொலிஸார் இதுவரை எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அரசும் எந்த உத்தியோகபூா்வ தகவலையும் அறிவிக்கவில்லை. எனினும் கடத்தல் சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இவ்வாண்டு முதல் மூன்று மாதங்களில் ஹெய்ட்டியில் 600 க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 3 மாதங்களில் இவ்வாறான 231கடத்தல் சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக உள்ளூர் சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மிகவும் ஏழ்மை நாடான ஹெய்டியில் அடிக்கடி நிகழும் வன்முறைகளால் நெருக்கடி நிலவி வருகிறது. ஜனாதிபதி மோஸ் படுகொலை மற்றும் அடுத்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.