விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி எனக் கூறிய மோசடி நபரை நம்பிய ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் ஒருவர், சுமார் 3,000 டொலர்களை இழந்துள்ளார்.
ஒன்ராறியோவின் Fonthill பகுதியைச் சேர்ந்த Traci Healy என்பவர், Vancouver நகரிலிருந்து Toronto திரும்பிக்கொண்டிருந்தபோது தனது இணைப்பு விமானத்தைத் தவறவிட்டுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த அவர், WestJet விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவைத் தொடர்ந்து அவரைத் தொடர்புகொண்ட சிலர், தாங்கள் WestJet நிறுவனத்தின் ஊழியர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தவறவிட்ட விமானத்திற்கான கட்டணத்தை மீள வழங்குவதாகக் கூறி, அவர்கள் அவரை நம்ப வைத்துள்ளனர்.
இதனை உண்மையென நம்பிய Traci Healy, தனது வங்கிக் கணக்கு மற்றும் கடன் அட்டை விவரங்களை வழங்கியுள்ளார். இதையடுத்து அவரது கணக்கிலிருந்து சுமார் 3,000 டொலர்கள் மோசடியாக எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியுடன் Kenya நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பது பின்னர் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள WestJet நிறுவனம், அதிகாரப்பூர்வமற்ற சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தனிப்பட்ட குறுஞ்செய்திகள் மூலம் பயணிகளிடம் பணம், வங்கித் தகவல்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் கோருவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் நிறுவனங்களின் பதிவுகளுக்குக் கீழ் இடப்படும் வாடிக்கையாளர் புகார்களையும் கருத்துகளையும் மோசடி நபர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இணையப் பாதுகாப்பு நிபுணர் Claudiu Popa எச்சரித்துள்ளார்.
விமானப் பயணச் சிக்கல்கள் அல்லது பணத்தை மீளப் பெறுவது தொடர்பான தேவைகளுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.