Reading Time: 2 minutes

Toronto நகரில் Lithium-ion Battery-களால் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு Toronto Fire Services அறிவுறுத்தியுள்ளது.

Tamil Business Directory

கடந்த சுமார் 36 மணி நேரத்திற்குள் மட்டும் Toronto நகரின் பல்வேறு பகுதிகளில் Lithium-ion Battery-களுடன் தொடர்புடைய நான்கு தீ விபத்துகளுக்கு தீயணைப்புப் படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை பிற்பகல் North York பகுதியில் Anthony Road, Wilson Avenue மற்றும் Dufferin Street அருகே உள்ள வீடொன்றின் garage-இல் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

மாலை 4 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர், garage பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறியதை கண்டுள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, garage-இல் ஒரு பையில் வைக்கப்பட்டிருந்த பல battery-களில் இருந்து தீ ஆரம்பித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் தீ garage கூரை வழியாக வீட்டின் attic பகுதிக்கும் பரவியதுடன், garage-இன் கூரையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் ஒருவர் paramedics-ஆல் பரிசோதிக்கப்பட்ட போதிலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

இதற்கு முன்னதாக புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு முன்னர், downtown Torontoவில் Dundas Street East அருகிலுள்ள George Street பகுதியில் அமைந்த Toronto Community Housing கட்டிடத்தின் நான்காவது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கும் Lithium-ion Battery-கள் தீ விபத்துக்குக் காரணமாக இருந்ததாக Toronto Fire உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், இருவர் மருத்துவமனைக்கு paramedics மூலம் அழைத்துச் செல்லப்பட்டதுடன், மற்றொருவர் தாமாகவே மருத்துவ உதவியை நாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் Scarborough பகுதியில் வீடொன்றில் charging செய்யப்பட்ட Lithium-ion Battery-களுடன் தொடர்புடைய தீ விபத்தும், Etobicoke பகுதியில் மற்றொரு Battery தொடர்பான தீ விபத்தும் பதிவாகியுள்ளன. இந்த இரண்டு சம்பவங்களிலும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.

2026ல் இதுவரை 76 சம்பவங்கள்

Toronto Fire வெளியிட்ட தகவலின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 76 Lithium-ion Battery தொடர்பான சம்பவங்களுக்கு தீயணைப்புப் படையினர் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவங்களினால் இதுவரை இருவர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இத்தகைய Battery தொடர்பான தீ விபத்துகள் 200 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக Toronto Fire Chief Jim Jessop தெரிவித்துள்ளார்.

குறிப்பாக e-bike, e-scooter உள்ளிட்ட micromobility சாதனங்களில் பயன்படுத்தப்படும் தரச்சான்று பெறாத அல்லது ஒழுங்குமுறைப்படுத்தப்படாத Battery-கள் பெரும்பாலான தீ விபத்துகளுடன் தொடர்புடையதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் Toronto Fire தெரிவித்துள்ளது.

90 நொடிகளுக்குள் அறை முழுவதும் தீப்பற்றும் அபாயம்

Lithium-ion Battery தீ விபத்துகளில் முக்கிய அபாயமாகக் கருதப்படுவது “thermal runaway” எனப்படும் இரசாயன தொடர் எதிர்வினையாகும்.

Battery ஒன்றில் இந்தச் செயற்பாடு ஆரம்பித்துவிட்டால், வெப்பம் மிக வேகமாக அதிகரித்து தீப்பற்றுவதுடன் சில Battery-கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.

சில சம்பவங்களில் Battery தீப்பற்றிய பின்னர் 90 நொடிகளுக்குள் ஒரு அறை முழுவதும் தீப்பற்றக்கூடிய “flashover” நிலையை அடைந்துள்ளதாக Toronto Fire தெரிவித்துள்ளது. இதனால் வீட்டுக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான நேரமும் மிகவும் குறைகிறது.

Battery பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை

Lithium-ion Battery-கள் smartphones, laptops, e-bikes, mobility scooters, power tools, vacuum cleaners மற்றும் குழந்தைகளின் toys உள்ளிட்ட பல அன்றாட சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

முறையாகப் பயன்படுத்தப்படும் தரச்சான்று பெற்ற Battery-கள் பொதுவாக பாதுகாப்பானவை. இருப்பினும் சேதமடைந்த, மாற்றியமைக்கப்பட்ட அல்லது தவறாக charge செய்யப்படும் Battery-கள் தீப்பற்றவோ வெடிக்கவோ வாய்ப்புள்ளது என City of Toronto எச்சரிக்கிறது.

பொதுமக்கள் Battery charge செய்யும்போது அதனை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்; manufacturer பரிந்துரைத்த Battery மற்றும் charger-களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; Battery-களை மாற்றியமைக்கவோ சேதப்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Battery அதிகமாக சூடாவது, வடிவம் மாறுவது, வீங்குவது, கசிவு ஏற்படுவது, வழக்கத்திற்கு மாறான வாசனை அல்லது சத்தம் எழுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

பழைய அல்லது சேதமடைந்த Lithium-ion Battery-களை garbage, Blue Bin அல்லது Green Bin-இல் போடக்கூடாது என்றும், அவற்றை City Drop-Off Depot அல்லது Community Environment Day மூலம் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்றும் Toronto Fire அறிவுறுத்தியுள்ளது.

Toronto நகரில் Lithium-ion Battery பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் தொடர்புடைய தீ விபத்துகளும் வேகமாக உயர்ந்து வருவது புதிய பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.