ரைம் (TIME) பத்திரிகையில் உலகின் வளர்ந்துவரும் சிறந்த அடுத்த செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் (time100 next-2021) ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியத் தமிழ் யுவதி மைத்திரேயி ராமகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார்.
கனடா – ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகாவைச் சேர்ந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். அவரது குடும்பம் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து கனடவில் குடியேறியுள்ளது.
நெட்ஃபிக்ஸ்ஸில் மிண்டி கலிங்கின் “நெவர் ஹேவ் ஐ எவர்” (‘Never Have I Ever’) என்ற பதின்ம வயதினருக்கான நகைச்சுவைத் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன்.
தொடரின் தயாரிப்பாளரான மிண்டி கலிங்கின் குழந்தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் தேவி என்ற பாத்திரத்தில் அவர் நடித்தார்.
விசித்திரமான பதின்ம வயது உணா்ச்சிகளை பாத்திரத்தின் ஊடாக வெளிப்படுத்தல், புதிய இடமொன்றில் சமூக பாரம்பரியத்தைப் பேணுதல், வீட்டில் இருக்கும் கண்டிப்புக்கள் என பல முதல் தலைமுறை குழந்தைகள் அனுபவித்த கடினமான மற்றும் தனித்துவமான பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இக்கதை அமைந்திருந்தது.
உலகளாவிய சமூக முடக்கல்களுக்கு மத்தியில் நெட்ஃபிக்ஸில் வெளியான தொடர் கிட்டத்தட்ட 16 மில்லியன் புதிய பின்தொடர்வோரை ஈர்த்தது.
இதேவேளை, மைத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு “திறமையான நகைச்சுவை நடிகை” என “நெவர் ஹேவ் ஐ எவர்” நெட்ஃபிக்ஸில் நகைச் சுவைத் தொடரின் தயாரிப்பாளரான மிண்டி கலிங் தெரிவித்துள்ளார்.
மைத்ரேயி ஒரு சமூக ஆர்வலர் போன்று செயற்பட விரும்புபவர். தனது தளத்தை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்த விரும்புகிறார் எனவும் அவா் கூறியுள்ளார்.
“நீங்கள் அவளுடன் இருக்கும்போது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியான, புத்திசாலித்தனமான யுவதியுடன் பேசுகிறீர்கள் என்று நினைக்கலாம். ஆனால் பின்னர், அவரது திறைமையை திரையில் பார்க்கும்போது நீங்கள் உண்மையில் ஒரு சிறந்த கலைஞருடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள் என்பதை நீங்கள் உணர முடியும் எனவும் மிண்டி கலிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரைம்ஸ் 2021 அடுத்த செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் தன்மை இணைத்தற்கு நன்றி தெரிவித்து தனது ருவிட்டரில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
ஒரு உண்மைக் கதையைத் தளுவிய கதாபாத்திரித்திரத்தில் நடித்தபோது அத்தப் பாதிரத்தின் வலுவையும் அந்தப் பாத்திரத்துக்கு இருந்த பொறுப்பையும் உணர்ந்து தான் தொடரில் நடித்ததாக ரைம்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் மைத்ரேயி குறிப்பிட்டுள்ளார்.