பொய்யா விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்று பார்த்தவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ‘மண்ணை இழந்தோம்‘ என்ற பாடல் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.
இந்த பாடலை கீழுள்ள இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தமிழ் இன அழிப்பின் பின்னர் பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்தபூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது. அப்படி ஈழத்தின் இனப்படுகொலையின் வாழும் சாட்சியான வைத்தியர் வரதராஜா அவர்களின் உண்மைக் கதை பொய்யா விளக்கு.
மிகவும் தரமானதொரு திரைப்படமாக இது வெளியாகி கடந்த வருடம் திரைக்கு வந்த படம் பொய்யா விளக்கு. வைத்தியர் வரதராஜாவே இதில் நடித்தும் இருப்பது ஒரு சிறப்பு.
கொரோனா (COVID 19) காரணமாக தொடர்ந்து திரையிட முடியாமல் தடைப்பட்ட இத்திரைப்படத்தை இப்போது இணையத்தில் பார்க்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனை எழுதி இயக்கியிருப்பவர் ஈழத்தமிழரும், தற்போது கனடாவில் வசிப்பவருமான தனேஸ் கோபால். ஈழ சினிமாவின் மிக முக்கியமான படமாக இது பார்க்கப்படுகின்றது.
இந்தப் படத்தில் எதுவிதமான அகோரக்காட்சிகளும் இல்லாமல் வலிகளைப் பதிய வைத்திருக்கிறார்கள். இனிமையான இசை, செழுமையான ஒளிப்பதிவு என்று ஒரு கவிதையாகப் படம் கையாளப்பட்டிருக்கிறது. வைத்தியரின் இயல்பான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பொய்யா விளக்கு திரைப்படத்தினை இணையத் தளத்தினூடாக பார்க்கலாம்.
பொய்யா விளக்கு திரைப்படத்தினை www.thelampoftruth.com என்ற இணையத் தளத்தினூடாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.
ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்புப் போரின் பின்புலத்தில் பணியாற்றிய மருத்துவரின் கதையினூடாக இடம்பெற்ற அவலங்களின் முக்கிய நிகழ்வுகளை வெளிக்கொண்டு வரும் பொய்யா விளக்கு திரைப்படம் இப்போது இணையத்தினூடாக மக்களுக்கு எடுத்து வரப்படுகிறது. பதினைந்துக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை திரைப்பட விழாக்களில் வென்று, ஈழத்திரைப்படங்களின் தரத்தினை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற இந்தத் திரைப்படம் எங்கள் மக்களின் கதைகளை சர்வதேச பரப்பில் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற வெண்சங்கு கலைக்கூடத்தின் ஆர்வத்தினைத் திருப்தி செய்வதாக இருக்கிறது. இந்த முயற்சியினை வெற்றிகரமாக ஆக்குதல் எம் மக்களின் பொறுப்பாகும்.
ஒரு கொடூரப் போர் வீழ்த்திச் சென்ற எங்கள் மக்களின் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் தியாகங்களும், அவலங்களும் இன்னமும் இரத்தம் காயாத நினைவுகளோடு இருக்கின்றன. இவை சொல்லப்படல் வேண்டும். இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தலைமுறை இருக்கும் போதே, அந்தக் கதைகள் திரிபு படுத்தப்படாமல் உலகமெங்கும் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். பொய்யா விளக்கு என்ற இந்தத் திரைப்படம் இந்த நோக்கத்திற்கான ஒரு காத்திரமான முதற்படி. எமது வருங்கால சந்ததிக்கும், தமிழரல்லாதோருக்கும் கற்பிதலுக்கான ஒரு மூலமாக இது இருக்கிறது.
தொடர்ந்தும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பொய்யா விளக்கு மேலதிக விமர்சனங்கள் மற்றும் பார்த்தவர்களின் கருத்துக்களை https://whiteconchstudios.com/viewer-comments/ இல் காணலாம்.