Reading Time: < 1 minute

கனடாவில் மிருகத்தனமாக நடுத்தெருவில் கொல்லப்பட்ட தமிழ் சகோதரி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூருவதற்காக நேற்றிரவு தமிழ் சமூகம் ஒன்று கூடி வன்முறைக்கு எதிராக ஒற்றுமையுடன் ஒரு நினைவுகூரலை நடத்தியிருந்தது.

நேற்றிரவு Highland Creek Community Park’கில் ஒன்றுகூடி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூறி அவரின் உருவப்படத்துக்கு மலர் வணக்கத்தை செலுத்தியதுடன், மெழுகுதிரி ஏந்தி தமிழ் மக்கள், அங்கிருந்து புறப்பட்டு தர்சிகா கொல்லப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்று கொல்லப்பட்ட இடத்தில் தமது அஞ்சலியை செலுத்தினர்.

பல்லின ஊடகங்கள் இதில் கலந்து கொண்டதுடன், டொரோண்டோ காவல்துறையும் தமது பங்களிப்பை தாமாகவே முன்வந்து வழங்கியிருந்தனர்.

ISEE INITIATIVE அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வில் பலரும் தர்சிகாவின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.

புதிய குடிவரவாளராக தனது கணவனை மட்டுமே நம்பி வந்த தர்ஷிகா எதிர்கொண்ட இன்னல்களையும், குடும்ப வன்முறைகளையும் , அதில் இருந்து மீண்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்து, தன்னையும், தாயகத்தில் உள்ள தனது குடும்பத்தாரையும் கவனித்துவந்த தர்ஷிகா தனது முன்னாள் கணவரால் மிருகத்தனமாக நடுத்தெருவில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ் கூறும் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

நேற்றைய திகதிவரை (Sep 26, 2019) தர்ஷிகாவின் உடல் விசாரணையிலேயே உள்ளதென்றும், விசாரணை முடிவில் உடலை இலங்கைக்கு அனுப்ப சகல ஏற்படுகளையும் ISEE INITIATIVE அமைப்பினர் செய்துள்ளனர் என்றும் ISEE INITIATIVE அமைப்பினர் தகவலை பகிர்ந்துகொண்டனர்.