கனடாவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து TD வங்கிக்கு சொந்தமான 22 மில்லியன் டொலர் மற்றும் தங்கம் கொள்ளை போன விவகாரத்தில் பொலிசார் துப்புத்துலங்காமல் மூன்று நாட்களாக திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் பீல் பிராந்திய பொலிசார் இந்த கொள்ளை தொடர்பில் விளக்கமளித்திருந்தாலும், திங்கட்கிழமை நடந்த கொள்ளை தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.
22 மில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பெட்டகம் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டது என்றே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் Air Canada விமானம் தரையிறங்கிய பின்னர் தங்கம் மாயமாகியுள்ளது. மேலும், மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு குத்தகைக்கு விடப்பட்ட பகுதி ஊடாகவே கொள்ளையர்கள் அந்த கிட்டங்குக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கொள்ளை போன பொருட்கள் தொடர்பில் விரிவான விளக்கமளிக்க அதிகாரிகள் இதுவரை முன்வரவில்லை. திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த துணிகர கொள்ளை தொடர்பில் வியாழக்கிழமை இரவு வரையில் கைது நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மட்டுமின்றி, சந்தேக நபர்களின் தகவல்களும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்த தங்கம் மற்றும் அதனுடன் விலை உயர்ந்த பொருட்களும் எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது ஒரு தனியான சம்பவம் என்றும் பொது பாதுகாப்பு விடயமாக கருதவில்லை எனவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.