ஸ்காபரோ ஹைலான்ட் கிறீக் குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை ரொரன்ரோவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 வயது தமிழ் ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர்.
எல்ஸ்மெயர் வீதி மற்றும் கொன்லின்ஸ் வீதிக்கு அருகே, ஃபிஷரி வீதியில் புதன்கிழமை இரவு 6:15 அளவில் இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்தப் பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, குறித்த அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், உயிரிழந்தவர் ரொரன்ரோவைச் சேர்ந்த Dollarama வியாபார நிறுவனத்தில் பணிபுரியும் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தினை அடுத்து ஆண் ஒருவர் தானாகவே காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ள நிலையில், அவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ள காவல்துறையினர், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் ரொரன்ரோவைச் சேர்ந்த 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் என்று அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த அந்தப் பெண் இலங்கையில் இருந்து வந்தவர் எனவும், சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் முன்னாள் கணவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு கடந்த மார்ச் 2017 இல் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் வழக்கொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அது மனைவியால் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொரோண்டோ தமிழ் (TorontoTamil.com) அறிகின்றது.
குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில், அல்லது அவர்கள் இருவர் தொடர்பில், அல்லது அவர்களுக்கு இடையேயான பிரச்சினை, அவர்களின் வரலாறு தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.