‘ப்ரவுட் போய்ஸ்’ (Proud Boys movement) அமைப்பை கனடிய அரசாங்கம் பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது.
‘ப்ரவுட் போய்ஸ்’ அமைப்பு கருத்தியல் ரீதியாக வன்முறைக்கு வித்திடும் தீவிரவாதக் குழுவாகக் கருதப்படுவதால் அந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டு தடை விதிக்கப்படுவதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆதரவு அமைப்பான ‘ப்ரவுட் போய்ஸ்’ வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து கடந்த ஜனவரி 6 ஆம் திகதி பெரும் வன்முறையில் ஈடுபட்டமை அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க முக்கிய காரணங்களில் ஒன்று என அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார்.
இவ்வாறு பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்படுவதன் மூலம் ‘ப்ரவுட் போய்ஸ்’ உள்ளிட்ட குழுக்களின் சொத்துக்களை கனடா முடக்க முடியும். மேலும் இந்தக் குழுக்களைக் சேர்ந்தவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுக் கைதானால் அவர்கள் மீது பயங்கரவாத குற்றங்கள் சுமத்தப்படலாம்.
‘ப்ரவுட் போய்ஸ்’என்ற இந்தக் குழு புலம்பெயர்ந்தோருக்கு எதிரானது. மேலும் வன்முறைகளிலும் அரசியல் ரீதியாக மோதல்களிலும் ஈடுபட்டுள்ள வரலாற்றைக் கொண்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக, குறிப்பாக 2018 முதல் இந்தக் குழுவின் வன்முறைச் செயற்பாடுகள் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் இந்தக் குழுவின் வன்முறைச் செயற்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளன என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் வொஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற வன்முறையில் ‘ப்ரவுட் போய்ஸ்’ அமைப்பில் அங்கத்தவர்களாக உள்ள இரண்டு கனேடியர்களும் பங்கேற்றுள்ளமை தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடாவின் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் ஐ.எஸ். அமைப்பு, அல் கொய்தா மற்றும் இவற்றுடன் தொடர்புடைய இணை அமைப்புக்கள், ஆறு வெள்ளையின மேலாதிக்க அமைப்புக்கள் என்பனவும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘ப்ரவுட் போய்ஸ்’ (Proud Boys movement) அமைப்பை பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடாக கனடா அமைந்துள்ளது.