Reading Time: < 1 minute

கனடாவில் வதியும் சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் கணவர் / மனைவியரை / துணைவரை இங்கு வரவழைப்பதற்கென இதுவரை வழங்கப்பட்டுவந்த திறந்த பணி அனுமதி (Open Work Permit (OWP)) சட்டத்தை மேலும் இறுக்குவதற்கு கனடிய அரசு தீர்மானித்துள்ளது. ஜனவரி 21, 2025 இல் நடைமுறைக்கு வரும் இச்சட்டத்தின்படி சில குறிப்பிட்ட கற்கையில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களும் பற்றாக்குறையுள்ள வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களும் மட்டுமே தமது கணவர் / மனைவியரைக் கனடாவிற்கு அழைக்க முடியும்.

Open Work Permit (OWP) எனப்படுவது ஒரு குறிக்கப்பட்ட வேலைக்கென விண்ணப்பித்தோ அல்லது LIMA திட்டத்தின் பிரகாரமோ கனடாவிற்குள் நுழையாது கனடாவிற்குள் வந்த பின்னர் எந்தவொரு துறையிலாயினும் வேலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என வழங்கப்பட்ட அனுமதியாகும். சர்வதேச மாணவர்களின் கணவன் / மனைவி / துணை எவருக்கும் மற்றும் விசேட பணித்திறன்களைக் (skilled) கொண்டவர்களுக்கும் இத் திறந்த குடிவரவு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதுவரை இருந்த சட்டத்தின்படி இத்திறந்த அனுமதியைப் பெறுவதற்கு ஒருவர் பின்வரும் தகமைகளைக் கொண்டிருந்திருக்க வேண்டும்:

  • விண்ணப்பதாரி சர்வதேச மாணவர் ஒருவரின் அல்லது வெளிநாட்டுப் பணியாளர் ஒருவரின் கணவன் / மனைவி /துணையாக இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரியை இங்கு அழைப்பவர் கற்கைக்கான அல்லது வேலைக்கான உத்தரவை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்
  • சர்வதேச மாணவர் இங்கு கற்கையை மேற்கொள்வதற்கான காலக்கெடுவுடன் கூடிய கற்கைநெறியைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்
  • வெளிநாட்டுப் பணியாளர் கனடாவில் பணியாளர் பற்றாக்குறை அதிகமான தொழிலொன்றில் பணியாற்றிவருபவராக இருக்க வேண்டும்
  • கணவன் / மனைவி / துணையை இங்கு அழைக்க விண்ணப்பிக்கும்போது அழைப்பவரின் விசா குறைந்தது 16 மாதங்களாவது கால அவகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும்

புதிய சட்டத்தின்படி விண்ணப்பதாரி பின்வரும் தகமைகளைக் கொண்டிருக்க வேண்டும்:

  • சர்வதேச மாணவராயின் அவர் குறைந்தது 16 மாதங்களுக்கு மேலான முதுமாணி (Master Degree) கல்வித் திட்டத்தில் அல்லது கலாநிதிப் பட்டப்படிப்பில் அல்லது சில நிபுணத்துவக் கல்வித் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும்
  • பணியாளர் பற்றாக்குறையுள்ள தொழில்களில் ஈடுபடுவோர் தொழில்நுட்ப, விசேட திறன் சார்ந்த அல்லது முகாமைத்துவ பணிகளில் (TEER-1) ஈடுபடுவோராக இருக்க வேண்டும்
  • இவற்றில் முன்னுரிமை கொடுக்கப்படும் துறைகளெனக் கணிக்கப்படுபவை:
    • இயற்கை மற்றும் பிரயோக விஞ்ஞானம் (Natural and applied sciences)
    • கட்டிட நிர்மாணம் (Construction)
    • சுகாதாரம் (Health care)
    • கல்வி, விளையாட்டு மற்றும் இராணுவம் (Education, sports, and military)

குழந்தைகள்

முந்தைய திட்டத்தில் போலல்லாது விண்ணப்பதாரிக்கு 18 வயத்துக்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களை இங்கு வரவழைக்க முடியாது.

சர்வதேச மாணவர்களுக்கான கற்கை அனுமதி

2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் கற்கை அனுமதி 485,000 ஆக இருந்தது. இது, 2025 இல் 437,000 ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.