கின்னஸ் சாதனை வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ‘குமார் ஆனந்தன் நீச்சல் தடாகம்’ உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் திரு. மங்கள சமரவீரஅவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.ஹரின் பெர்னான்டோ, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.மாவை சேனாதிராஜா, திரு சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராஜா அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமரர் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம் அமைக்க 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவினால் முன்மொழியப்பட்டிருந்தமைக்கமைவாக இந்த திட்டம் 2017 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டது.


இலங்கையின் வட பகுதியில் அமையும் முதலாவது சர்வதேச தர நீச்சல் தடாகம் இதுவாகும்.
இது 8 வழித் தடங்களைக் கொண்டமைந்துள்ளது .

கிளிநொச்சியில் இதையொத்த நீச்சல் தடாகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்ற போதிலும் கிளிநொச்சியில் அமைக்கப்படும் தடாகத்தில் 6 வழித் தடங்களே அமைக்கபட்டுள்ளன.

மேலும் தடாகமானாது சர்வதேச தர நீச்சல் போட்டிகளை நடத்தக்கூடிய, அதே வேளை, வருடம் முழுவதும் நீச்சல் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஆழிக்குமரன் ஆனந்தன்?
ஏழு கின்னஸ் சாதனை உட்பட ஒன்பது உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன், 1984 ஆம் ஆண்டுஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது, 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.

ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு;
- 1971ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது,
- 1978ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது,
- 1979 ஆம் ஆண்டில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை,
- 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை,
- 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை,
- 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups),
- 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை,
- 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை
- 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.