கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது கூர்மையான பொருளால் திரையை கிழித்துள்ளார்.
பின்னர் அரங்கின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மீது மிளகு விசிறலை தௌித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இரண்டு மணி நேரத்திற்குப்பின், Whitby பகுதியில் உள்ள ஒரே நிர்வாகத்தைச் சேர்ந்த Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த சந்தேகநபர் ஒருவர், முந்தைய திரையரங்கில் இடம்பெற்றதைப் போன்றே திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் போது கூர்மையான பொருளால் திரையை கிழித்துள்ளார்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கிடைத்த தகவலின்படி, உள்ளூர் குழுவொன்று இந்த தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஒரு தெலுங்கர் மற்றும் மூன்று தமிழர்கள் அடங்கிய உள்ளூர் குழுவொன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தை கனடாவில் திரையிடவிடாமல் தடுப்பதற்கு தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த குழுவினர் இந்தியா மற்றும் ஏனைய பிராந்திய மொழி திரைப்படங்களை சில திரையரங்குகளுக்கு விநியோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்தத் திரைப்படங்களின் ஊடாக பெறப்படும் வசூலை குறைத்துக் கூறுவது இந்த குழுவினரின் வழக்கம் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒரு படத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வசூலானால், வெறும் 20,000 அல்லது 30,000 அமெரிக்க டொலர்கள் மட்டுமே வசூலாவதாக இந்த உள்ளூர் குழு தகவல்களை பரப்பி வந்துள்ளனர்.
இந்தநிலையில், சை ரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் உரிமைகளை பஞ்சாப் இனத்தவர் ஒருவர் பெற்று கனடாவில் வெளியிட்டுள்ளார்.
இதனைத் தடுக்காத பட்சத்தில் உண்மையான வசூல் தொகை தெரிந்துவிடும் என அஞ்சி அந்த கும்பல் திரைப்படத்தை தடை செய்ய இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில் சந்தேகத்திற்குரிய ஒருவரின் ஔிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.