Reading Time: 3 minutes

30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அழிந்துபோன இலங்கையின் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கையும் கிழக்கையும் கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் செய்யும் முயற்சிகள் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகின்றன என்பதற்கு இந்தப்பதிவு ஒரு சிறு உதாரணம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்……… புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர் இறக்கிறார்கள். இவற்றை கண்டுபிடிக்க முறையான வசதிகள் அங்கே இல்லை. MRI போன்றவற்றின் மூலமான பரிசோதனைக்கு கொழும்புக்கு தான் செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. மக்கள் வறுமையில் உள்ளார்கள் இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கொழும்புக்குச் சென்று வைத்தியம் செய்ய முடியும்? இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

நாங்கள் ஒரு MRI மெசினை வாங்கிக் கொடுப்போம். அதுபற்றி நீயே விசாரித்து ஒழுங்குகளை செய் என்றார். அதன்படி நான் MRI பற்றிய விபரங்களை எங்கே வாங்கலாம், விலை, எப்படி ஸ்தாபிப்பது பற்றிய விவரங்களை சேகரித்து உறுதி செய்தேன். ஜெர்மனியில் வாங்குவதாக முடிவு செய்தேன். வறுமையில் இருக்கும் வடபகுதி மக்களுக்காகத்தான் இதைச் செய்யத் தூண்டியது.

இதுபற்றி நடைமுறைப்படுத்த ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இருதய வைத்திய நிபுணரின் உதவியை நாடினேன். அவரும் ஒரு நல்ல சமூக சேவையாளர் எனக்கு நன்கு தெரிந்தவர். அவரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.

ஒரு நாள் நானும் இன்னொரு நண்பரும் இதுபற்றி கலந்துரையாட சென்றிருந்தோம். எல்லா தகவல்களையும் அவருக்கு தெரிவித்தேன். அவரும் பாராட்டினார். அந்த இடத்திலேயே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பாக இருந்த டாக்டருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 30 நிமிடங்கள் வரை சம்பாஷணை நடந்தது. நங்களும் அதை கேட்டு கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரால் தரப்பட்ட தகவல்கள்………. ஜப்பான் அரசு எங்களுக்கு இந்த உபகரணங்களுடன் கூடிய, ஒரு நவீன கட்டிடத்துடன் கூடிய, ஒரு நிலையத்தை( Fully equipped ) கட்டி அமைத்து தரப்போகிறார்கள். இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது. ஆகையால் நீங்கள் இதற்காக முயற்சி செய்ய தேவையில்லை என்றும் சொன்னார். ஏனெனில் நீங்கள் வாங்கித் தந்தால் அதன் பராமரிப்பு மற்றும் சேவை செய்யும் செலவுகளை அரசு ஏற்காது. அதற்கு பெரும் தொகை செலவாகும் என்றும் தெரிவித்தார். அத்துடன் இது ஒரு யானையை வாங்கி கொடுப்பது போன்றது. அதைப் பராமரிப்பது மிகவும் கடினமானது என்ற உவமையையும் இரு டாக்டர்களும் நகைச்சுவையாக தெரிவித்தார்கள். இது ஐந்து வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த விடயம்.

இப்பொழுது, கடந்த வாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதி சேகரிப்பதற்காக ஒரு இராப்போசன விருந்து அவுஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்றது. அதில் நானும் கலந்து கொண்டேன். இசை நிகழ்ச்சியுடன் கூடிய நல்ல உணவுடன் நடைபெற்றது, உண்டு ம்கிழ்ந்தோம்.

இந்த நிதி சேகரிப்பு எதற்காக என்று அங்கே போன பின்புதான் எனக்கு தெரியவந்தது. MRI equipment வாங்குவதற்கு 130 மில்லியன் ரூபாய்கள் சேர்ந்துவிட்டது. இன்னும் 12 மில்லியன் ரூபாய்கள் மட்டும் தேவைப்படுவதாகவும் அதை சேகரித்து தரும்படி தற்போதைய வைத்தியசாலை அதிகாரியான அவரின் நண்பரான ஒரு டாக்டர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்கள். இந்த நிதியை இலங்கை அரசிடம் கொடுத்து அரசு மூலமாக MRI மெசினை வாங்கப்போவதாக என்ற தகவலையும் தெரிவித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற பேச்சின் போது,

Current MRI equipment was donated by India which is neither Sri Lankan standard nor Australian standard.

இந்தியா அன்பளிப்பாக வழங்கிய, தற்பொழுது உள்ள மெசின் இலங்கைத் தரத்திலும் இல்லை மற்றும் அவுஸ்திரேலிய தரத்திலும் இல்லை என்றார். மிகவும் தரம் இல்லாதது.

இது என்னை அதிர்ச்சியடைய வைத்தது, 200 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து ஒரு MRI machine வாங்கித் தருவதாக 5 வருடங்களுக்கு முன்பு தெரிவித்தபோது தந்த தகவல்களுக்கு என்ன நடந்தது? ஜப்பான் அரசு ஏன் அதை செய்யவில்லை? அல்லது இலங்கை அரசு அதை தங்கள் பகுதிகளுக்கும் மாற்றிவிட்டதா? அப்படியாயின் பொறுப்பான வைத்திய அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்தினார்களா? தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு என்ன செய்தார்கள்? இவற்றை தற்போதைய வைத்தியசாலை அதிகாரி நடந்ததை தெரிவித்தால் மக்கள் அறிந்து கொள்வார்கள். இப்படி இந்த தரமில்லாத MRI மூலமாக பரிசோதனை செய்வது எதிர்காலதில் நோயாளிக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

MRI – Magnetic resonance imaging Cost: $1.2m

யப்பான் அரசு……. உலகத்தில் உயர்ந்த வைத்திய தொழில்நுட்பம் உடைய நாடு. வெறும் கட்டிடத்தை மாத்திரம் கட்டிக் கொடுத்து விட்டு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஏன் அந்த கட்டிடத்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கட்டினார்கள்? அதற்கு ஏன் உபகரணங்களை பொருத்தவில்லை? என்ன நடந்தது? 20- 30 கோடிகளில் சொகுசு வாகனங்கள் பெற்று உல்லாச வாழ்க்கை வாழும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவற்றுக்காக என்ன செய்தார்கள்? கேவலம் தமிழரின் நிலை இதுதான்.

வைத்தியர்களுக்கு உடலுக்கு உள்ளே இருக்கும் நோயைக் கண்டுபிடிக்கும் மூன்றாவது கண் நிச்சயமாக இல்லை. தற்காலத்தில் நோய்களை கண்டுபிடிக்கும் உபகரணங்கள் இல்லாத வைத்திய முறை தரமில்லாத, உயிரைப் பறிக்கும் வைத்தியம் என்பதுதான் யதார்த்தம். ஆகையால் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணத்து வைத்தியர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். ஒரு சில புலம்பெயர் வைத்தியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயபடுகிறார்கள் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும். உங்கள் விளம்பரத்துக்காக செயல்படாதீர்கள்.

நிலைமை இப்படி இருக்கையில், ஆஸ்திரேலியா, லண்டன், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் டாக்டர்கள், நீங்கள் கடந்த பத்து வருடங்களாக பெரிய விளம்பரங்களுடன் திரும்பத் திரும்ப யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நிதிசேகரிப்பு, விழாக்கள் போன்றவை செய்தீர்கள். அப்படியானால் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?

கடந்த பத்து வருட கால உங்களுடைய நடவடிக்கைகளும் மற்றும் பிரச்சாரங்களின் படியும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை இன்று உலக தரத்தில் முதலாம் தரத்தில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?

By: Boopal Chinappa