2009 இனவழிப்பு யுத்தத்திற்குப் பின்னரான காலபகுதியில் ரொறொன்ரோவுக்குச் சென்றிருந்த போது, எனது உறவினர் ஒருவரது விட்டில் தெரிந்தவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அப்போதைய அரசியல் நிலவரம் பற்றி என்னுடன் பேசவிரும்பினார். முன்னர் தமிழ்த் தேசியத் தளத்தில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்ட அவர் இப்போது விரக்தியடைந்திருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. எமக்கிடையிலான உரையாடலின்போது, அவர் “வன்னியில் உள்ளவர்களுக்கு படித்தவர்களைப் பிடிக்காது” எனக் கூறினார். விடுதலைப் புலிகளின் தலைமையையே வன்னியில் உள்ளவர்கள் என்று அவர் குறிப்பிட்டார் என்பதனை நான் புரிந்து கொண்டதனால். ஏன் அவ்வாறு குறிப்பிடுகிறார் என வினவினேன். அவரது கருத்துக்கு ஆதாரமாக அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பாளராகவிருந்த திரு. வி. மணிவண்ணன் (காஸ்ரோ) வெளியிட்ட காணொலி ஒன்றைக் குறிப்பிட்டார்.
போர் மிகவும் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் 2008ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2009ம் ஆண்டின் ஆரம்பத்தில் காஸ்ரோ அவர்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துலகச் செயலகப் பணியாளருக்கென ஒரு செய்தியினைக் காணொலி வடிவில் அனுப்பியிருந்தார். அக்காணொலியில், விடுதலைப் புலிகள் தமது இலட்சியத்தில் விட்டுக்கொடாது உறுதியாக இருப்பதனால், அவர்களை அழித்துவிட்டு, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் மெத்தப் படித்த மேதாவிகளின் கைகளில் தமிழ் மக்களின் அரசியற் தலைமையைக் கையளிக்க மேற்கு நாட்டு அரசாங்கங்கள் முற்படுவதாகக் குற்றஞ் சாட்டியிருந்தார்.
இங்கு காஸ்ரோ அவர்கள் குறிப்பிடும் ‘மெத்தப்படித்த மேதாவிகளின்” என்ற சொல்லாடல் ஈழத்தமிழ்ச் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களையோ அல்லது துறைசார் விற்பன்னர்களையோ குறித்து நிற்கவில்லை என்ற புரிதல் இல்லாததனால் விடுதலைப் புலிகளுக்கு படித்தவர்களை பிடிக்காது என்ற முடிவிற்குச் சிலர் வருகிறார்கள். political elites ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தரப்பினரையே காஸ்ரோ ‘மெத்தப் படித்த மேதாவிகள்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்குரிய பொருத்தமான சொல்லாடல் இல்லாமையினால் இவ்வாறு கூறியிருக்கக்கூடும். தவிரவும், விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அரசாங்க அதிகாரசபை வரைபினை ஈழத்தமிழ் மக்களிடையே உள்ள துறைசார் விற்பன்னர்களே வரைந்தனர் என்பதிலிருந்து விடுதலைப் புலிகள் படித்தவர் களை புறக்கணிக்கவில்லை என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
Political elites என்ற ஆங்கிலப் பதத்திற்கு இணையான தமிழ் வார்த்தை பயன்பாட்டில் இல்லாததால் அவரவர் தமக்கு விரும்பிய சொல்லாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், அரசியற் சொல்லாடலாகவுள்ள political elites என்பதனை ஆங்கிலப் புலமை யுள்ளவர்களாலும் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றே உணர முடிகிறது.அண்மை யில் “உலகத் தமிழர் பேரவை” என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினரால் அரங் கேற்றப்பட்ட ‘இமாலயப் பிரகடனம் தொடர்பாக லண்டன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டுவரும் மரியோ அருள்தாஸ் ஒரு கட்டுரை ஒன்றினை வரைந்திருந்தார். கொழும்பிலிருந்து வெளிவரும் Financial Times பத்திரிகையில் வெளியான அக்கட்டுரையில், மேற்படி பிரகடனம் Tamil elite களினால் கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் படித்த ஒரு புலம் பெயர் அரசியற் செயற்பாட்டளார் குறித்த தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்களை எனக் கூற முடியாது என வாதிடுகிறார். அதற்கு அவர் வழங்கிய விளக்கம் இவ்விடயத்தில் அவருக்குள்ள குழப்பத்தை வெளிப்படுத்துகிறது. இத்தீர்மானத்தில் கையொப்பமிட்ட ஒருவர் LinkedIn தளத்தில் தனது நிலைத் தகவலாக “Open to Work” எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே அவரை elite என அழைக்க முடியாது என்பதுதான் மேற்படி நபரின் வாதம். அதாவது தனக்கு வேலை தேடிக் கொண்டிருக்கும் நபரை மேட்டிமையின் அங்கத்தவராகச் சேர்த்துக் கொள்ள முடியாது என்பது அவரது கருத்தாகவுள்ளது.
அரசியல் விஞ்ஞான அடிப்படைகளில் மேட்டிமை குழு பற்றிய கோட்பாடு (Elite theory), ஒரு சமூகத்திற்குத் தேவையான விடயங்களை அச்சமூகத்திலுள்ள ஒரு சிறுகுழுவினரால் திறம் பட நிர்வகிக்க முடியும் என்று கூறுகிறது. இவ்வாறு அரசியல் அதிகாரங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு குழுவினரையே political elites என அது அடையாளப்படுத்துகிறது. இவர்களையே நாம் Tamil elites என அடையாளப் படுத்துகிறோம். இவ்விடயத்தில் பலருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் உலகத் தமிழர் பேரவை எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் இக்குழுவினர் அதிகார மையங்களால் ஏற்றுக் கொள்ளபட்ட ஒரு குழுவினர் என்பதனைத் தவிர அவர்களுக்கு வேறெந்த முக்கியத்துவமுமில்லை என்பதில் முரண் பட்ட கருத்துகள் இருக்காது என நம்புகிறேன்.
தமிழ் மக்கள் மத்தியில் தம்மைப்பற்றி எவ்விதமான கருத்து இருக்கிறது என்பது பற்றியும் அவர்கள் அக்கறைப்படுவதில்லை. அதிகார மையங்களின் நம்பிக்கைக்குரிய தரப்பாக தாம் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே அவர் களுடைய கவனம் இருக்கிறது.
இமாலயப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட தரப்பினர் தம்மை ஒரு மேட்டிமை குழு என அழைப்பதனையோ அல்லது தாம் வெளிப்படைத் தன்மையின்றிச் செயற்படுவதனையிட்டோ அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் தம்மைப்பற்றி எவ்விதமான கருத்து இருக்கிறது என்பது பற்றியும் அவர்கள் அக்கறைப்படுவதில்லை. அதிகார மையங்களின் நம்பிக்கைக்குரிய தரப்பாக தாம் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே அவர் களுடைய கவனம் இருக்கிறது. இவ்விடயத்தில் தமக்குப் போட்டியாக யாரும் வராமல் பார்த்துக் கொள்வதில் மாத்திரம் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.
அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளில் தமது சமூகத்தின் நலனில் அக்கறைகொண்ட தரப்பாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டாலும், நடை முறையில், அதிகாரங்களின் முகவர்களாக மாத்திரமே இவர்கள் செயற்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது. தத்தமது நாடுகளில் ஜனநாயகம், மக்களாட்சி, கருத்தச்சுதந்திரம் எனப்பேசுகின்ற மேற்குலக அரச மையங்கள், மற்றைய நாடுகளில் வெறுமனே தமது நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று செய்படக்கூடிய அரசாங்கங்கள் அமைவதனையே விரும்புகின்றன. இந்நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படக்கூடிய குழுக்களையே நாம் அரசியல் மேட்டிமைக் குழுக்களாக அடையாளங் காண முடியும்.
ஒரு தனித்து தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல் எலாச் சமூகங்களிலும் இந்த மேட்டிமைக் குழுக்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. சிங்கள சமூகத்திலும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது. இலங்கைத் தீவின் ஜனநாயகம் எத்தகைய நிலைமையிலிருந்தாலும், சிறுகுழுவினரே ஆட்சியைத் தீர்மானிப்பவர்களாக அமைந்திருக்கிறார்கள். 60 விழுக்காடு வாக்காளர் களினால் தெரிவு செய்யப்பட்டவர் இரண்டாண்டு காலத்திற்குக் கூட ஆட்சியிலிருக்க முடியாத நிலையும், மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டவர் பின்கதவு வழியாக நாட்டின் அதிபரானதனையும் நாம் கண்டிருக்கிறோம். இந்த லீலா விநோதத் தினை அரங்கேற்றுவதில் அதிகார மையங்களின் முகவர்களே பங்களிப்பு பெரியது. அவர்களது முயற்சிக்கு ஏற்ற அரசியல் நிலையை அரசியல் வாதிகளின் பித்தலாட்டங்கள் இலகுவாக்கின என்பது வேறுவிடயம்.
ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மேட்டி மைக் குழுக்கள் தொடர்பில் மக்கள் குறித்தளவு விழிப்புணர்வுடனேயே காணப்படுகிறார்கள். தாயகத்தில், மக்கள் ஆதரவு இருந்தால் மாத்திரமே நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்ற நிலைமையும் இவ்விடயத்தில் மக்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அன்றேல், ‘இமாலயப் பிரகடனத்தில்’ கையொப்பமிட்டோர் பட்டியலில் திருவாளர்கள் சம்பந்தன், சுமந்திரன் பெயர்களும் இருந்திருக்கும். மேற்படி உலகத் தமிழர் பேரவையின் தலைவர்
இமானுவல்பாதிரியார் தாயகத்திலிருந்தாலும் இக்குழுவுடன் பகிரங்கமாக அடையாளங் காட்டாமைக்கும் இதுவே காரணமாக அமைந்தது.
ஈழத்தமிழ் மக்களின் அரசியலை மடை மாற்ற முயலும் மேற்படி தரப்புகளையிட்டு வெறுமனே விழிப்புணர்வுடன் இருந்தாற் போதுமானது அன்று. தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் அரசியற் தரப்புகள் பலவீனமான நிலையிலிருப்பின் மேற்படி குழுக்கள் தலையெடுப்பதனைத் தவிர்க்க முடியாது போய்விடும். பார்வைக்கு அதிகம் ஆபத்தில்லாத தரப்புகள் போன்று தோன்றும் அரசியல் மேட்டிமைக்குழுக்கள் அரசியல் வலு மையங்களின் துணையுடன் தமிழரின் அரசியலை மடைமாற்றும் வல்லமை படைத்தவை. குடுகுடுப்பைக்கார்கள் போல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க அவர் வருகிறார் இவர் வருகிறார் என பராக்குக் காட்டுபவர்களின் செயற்பாடும் இவர்களை நியாயப்படுத்துவ தாகவும் வலுப்படுத்துவதாகவும் அமையும்.
மிகுதியை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்.
நன்றி: ஒரு பேப்பர்