ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசி மற்றும் இந்தியாவின் சீரம் நிறுவனம் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஹெல்த் கனடா நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் கனடாவிலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தடுப்பூசிகளும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு தடவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை மிகவும் ஊக்கமளிக்கும் செய்தி என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள பைசர் மற்றும் மொடர்னா மற்றும் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகளுடன் மார்ச் இறுதிக்குள் கனடாவுக்கு சுமார் 6.5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அஸ்ட்ராஜெனெகா கனடாவுக்கு 20 மில்லியன் தடுப்பூசிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளது எனவும் அவா் கூறினார்.
கோவாக்ஸ் எனப்படும் உலக சுகாதார அமைப்பின் உலக பொது தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழ் மார்ச் மாத இறுதிக்குள் 500,000 தடுப்பூசிகள் கனடாவுக்கு அனுப்பப்படலாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கனடாவில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் விலை குறைந்தவை. அத்துடன் எளிதில் சேமிக்கக் கூடியவை. இதனால் இவற்றை கனடாவின் துரப் பகுதிகளுக்கு இலகுவாக எடுத்துச் சென்று விநியோகிக்க முடியும் என்பது மற்றொரு நன்மையாகக் கருதப்படுகிறது.