கனடாவின் Greater Toronto Area (GTA) பகுதியில் இயங்கிவந்ததாகக் கூறப்படும் பாரிய மனிதக் கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் வலையமைப்பு ஒன்றை Halton Regional Police முறியடித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதக் கடத்தல் வலையமைப்பினால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“Project Troubadour” என்ற பெயரில் சுமார் 10 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையின் விபரங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் வெளியிடப்பட்டன.

இந்தக் கடத்தல் வலையமைப்பினூடாக 18 முதல் 34 வயதிற்குட்பட்ட குறைந்தது 12 பெண்கள் வணிகரீதியான பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என Halton Regional Police கண்காணிப்பாளர் Dave Costantini தெரிவித்துள்ளார்.
ஜூலை 13ஆம் திகதி Mississauga, Oakville மற்றும் Burlington பகுதிகளில் உள்ள 10 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது மொத்தமாக 85 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சோதனைகளின்போது Lamborghini Urus, Mercedes-Benz S550 மற்றும் Mercedes-Benz AMG GT ஆகிய சொகுசு வாகனங்கள், இரண்டு Sea-Doo நீர்வாகனங்கள், சுமார் 450,000 டொலர் மதிப்பிலான ஆடம்பர நகைகள் மற்றும் 30,000 டொலர் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட Burlington பகுதியைச் சேர்ந்த 40 வயதான Omar “Syph” Brooks மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
“Coco” மற்றும் “Ivy Love” என அழைக்கப்படும் 33 வயதான Michelle Dimarco மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவினர் Ontario மாகாணத்தில் மட்டுமல்லாமல் British Columbia மற்றும் Alberta ஆகிய மாகாணங்களிலும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கலாம் என துப்பறிவாளர் Scott Heyerman தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சம்பவம் குறித்த தகவல்களைக் கொண்டவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.