இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள் பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் பிரதிபலிப்பாகும். சிறுபான்மை தமிழ் மக்களிடம் இந்த அரசு மோசமாக தோல்யடைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கவும், அவர்களை அரசியலுக்குள் சம குடிமக்களாக இணைக்கவும் இந்த தேர்தல் முடிவு எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அவர்களின் விவகாரங்களில் சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் அவசியத்தை தீவிரமாக வலியுறுத்துகின்றன.
தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையே அவர்களைப் பாதுகாக்கும். அத்துடன், அவர்களின் நிலம், மொழி, கலாசாரத்தையும் பாதுகாக்க சுயநிர்ணய உரிமை அவசியம் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது எனவும் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவது தீவில் குற்றமிழைத்தோருக்கு தண்டனையில் இருந்து விதிவிலக்களிக்கும் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது.
தற்போதைய உலக ஒழுங்கால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விலக்கும் அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளது.
இந்த தேர்தலில் ராஜபக்ஷக்கள் வெற்றி பெற்றுள்ளபோதிலும் சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய அரசு நிர்வாகத்தின் மாற்றத்தால் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க போராடியவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்கள், முன்னாள் போராளிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் துணையிருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
“கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள ஏனைய மனித உரிமை ஆர்வலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக நானும் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.