ஓன்ராரியோ – மாகாணம் ஸ்கார்பாரோ-ரூஜ்பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி பூர்வகுடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய 42 ஆவது பாராளுமன்றத்தில் 2015 முதல் 2018 வரை பூர்வகுடியினர் மற்றும் வடக்கு விவகாரக் குழுவின் உறுப்பினராக ஹரி ஆனந்தசங்கரி பணியாற்றினார்.
கனேடிய பூர்வகுடியினர் நலன் சார்ந்த 262-ஆவது இலக்க சட்டமூலத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற அவர் முன்னின்றார்.
பூர்வகுடி மக்களின் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் விதந்துரைக்கப்பட்ட சரத்துக்களுக்கு அமைவாக கனேடிய பூர்வகுடியினர் குறித்த சட்டங்கள் அமைவதை உறுதி செய்வதிலும் அவர் கடுமையாகப் பாடுபட்டார்.
அத்துடன் கனேடிய பாரம்பரிய மற்றும் பல்கலாசார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக, சுதேச மொழிகளுக்கு உரிய மதிப்பளிக்கும் சி -91 இலக்க சட்டமூலத்தை நிறைவேற்றவும் ஹரி ஆனந்தசங்கரி செயலாற்றினார்.
இந்நிலையில் பூர்வகுடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஹரி ஆனந்தசங்கரி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் பூர்வகுடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளுக்கு பரிகாரம் காண வேண்டும். அந்த மக்களின் சுயநிர்ணய அடிப்படையிலான கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதே தவறுகளுக்கு ஈடாக அமையும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலத்திற்கு முதல் தலைமுறை குடியேறிகளான பூர்வகுடி மக்களின் உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை முழுமையாக அமுல்படுத்துவது உட்பட பூர்வகுடி உரிமைகளைப் பாதுகாக்க அயராது உழைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த புதிய பதவியில் அமைச்சர் கரோலின் பென்னட் மற்றும் பூர்வகுடி மக்களோடு இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் எனவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.