கடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி தீபா மேத்தா இயக்கிய FUNNY BOY திரைப்பட சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு முன் 1994ம் ஆண்டில் கனடாவில் இலங்கை, கனடா எழுத்தாளர் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி, Lambda Literary Awards வென்ற நாவல் ‘Funny Boy’. தமிழ்-சிங்கள இன முறுகல் காலத்தில் வளர்ந்த ஒரு தமிழ் ஓரினச்சேர்க்கையாளரான இளைஞனைச் சுற்றி இக் கதை அமைகின்றது.
இந்த நாவலை தழுவி கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா ‘Funny Boy’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப் படத்திற்கான வசனங்களை தீபா மேத்தாவும், ஷியாம் செல்வதுரையும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு தீபா மேத்தா ஃபயர் (Fire) என்ற படத்தை வெளியிட்டார். ஃபயர் திரைப்படம் அவரது தாய்நாடான இந்தியாவில் திரைக்கு வந்தபோது மாபெரும் சர்சையில் சிக்கியத்துடன் உலக அளவில் பல விருதுகளையும் பெற்றுக்கொண்டது.
இந்திய குடும்பத்தில் இரண்டு மைத்துனர்கள் (பிரபல நடிகர்கள் ஷபானா அஸ்மி மற்றும் நந்திதா தாஸ் நடித்தனர்) ஒருவருக்கொருவர் ஓரினச்சேர்க்கை அன்பை சொல்லிய படமே ஃபயர். இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாளில் அடிப்படைவாதிகளினால் திரையிடப்பட்ட திரையரங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்தியாவில் இத்திரைப்படம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது.
‘Funny Boy கதைக்களம் இலங்கை கொழும்பு நகரத்தில் அமையப்பெற்றுள்ளது. 1974 தொடக்கம் 1983 க்கு இடையேயான இந்த கதை ஒரு தமிழ் சிறுவனை மையப்படுத்தியும் அச்சிறுவன் வளர்ந்து ஓரினச்சேர்க்கையாளரான இளைஞனாவதையும் சுற்றி இக் கதை நகர்கின்றது.
கதை நடந்த காலம், இடம் என்பவை அந்த கதை நடக்கும் காலப்பகுதியில் தமிழர் மீதான பெரும்பான்மை சிங்களவர்களின் மனநிலை, வெறுப்பு, விடுதலைப் போராட்டம் தொடர்பாக அவன் சந்திக்கும் அனுபவங்கள் என்பதை அந்த கால நிலைமைகளை திரையில் கொண்டுவருவதனூடாக Funny Boy கதை நகர்கின்றது. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அர்ஜீ செல்வரத்னம் கதையின் நாயகன். இலங்கையின் கொழும்பு நகரத்தில் வசதியான குடும்ப பின்னணியில் வளரும் ஒரு தமிழ்ச் சிறுவன். வளரும்போதே அவனது பாலினம் பற்றிய குழப்பம் அவனோடு வளர்கிறது.
குழந்தையாக இருந்தபோதும், தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள்
தன்னை வித்தியாசமாக இனங்காணுவதையும், அழைப்பதையும் புரிந்துகொள்கிறார்.
அர்ஜி அலங்காரம் செய்வதையும், புடவைகளில் தன்னை அலங்கரித்துக்கொள்வதையும் ரசிக்கிறார். சிறுவர்களாக உறவினர்களுடன் விளையாடும்போது மணப்பெண்ணாக உடையணிந்த அர்ஜி, சிறுமிகளால் கேலிசெய்யப்படுகின்றார்.
சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட பிடிக்காத அர்ஜி தன்னை அலங்கரித்துக்கொள்வதையும் கால்விரல்களில் வண்ணப்பூச்சு பூசுவதையும் ரசிக்கின்றார். இவரது நடத்தையை பார்த்து பெற்றோர் கவலை கொள்கின்றனர்.
வளர்ந்துவரும் அர்ஜி தன்னை ஒருபாலினத்தவராக உணர்வதும், அன்பு, காதல் இனங்களைக் கடந்து வியாபித்து நிற்பது, பெற்றோர் அதை அறிந்துகொள்வது என்பனவெல்லாம் பார்வையாளர்களை சங்கடப்படுத்தாதவாறு கலைத்துவத்தோடு சொல்லப்பட்டுள்ளது.
படத்தில் அர்ஜீயின் இளமைப் பருவத்தின் பாத்திரத்தை அருஷ் நாண்ட் என்பவரும், வாலிப பருவத்தை பிராண்டன் இங்கிரம் என்பவரும் ஏற்று நடிக்கிறார்கள். இதர பாத்திரங்களில் நிம்மி ஹரஸ்கமா, அலி காஸ்மி, அகம் தர்ஷி, சீமா பிஸ்வாஸ், றெஹான் முதநாயக்கா, சிவாந்தா விஜேசிங்கா ஆகியோர் ஏற்றிருக்கிறார்கள்.
அர்ஜியின் “குறைபாடுள்ள” அடையாளத்தை ஏற்றுக் கொள்ளும் ராதா ஆண்ட்டியாக வான்கூவரை சேர்ந்த ஆகம் தர்ஷி நடிக்கின்றார்.
Telefilm Canada வின் ஆதரவுடன் வெளிவரும் இப்படம் இலங்கை தமிழர் நிலை பற்றியும், அங்கு நடந்த போர் பற்றியும், ஒருபாற்சேர்க்கையாளர் தம்மைப் பகிரங்கப்படுத்துவது பற்றியுமான ஒரு படமாக அமைகின்றது.
இப்படத்தை டேவிட் ஹாமில்டன் (மேத்தாவின் கணவர்) தயாரித்துள்ளார்.
இப்படத்தில் இலங்கையில் நடந்த இன வன்முறைகளின் தகவல் வழங்குநராகவும் மற்றும் ஆலோசனை குழுவிலும் கனடாவை சேர்ந்த பேராசிரியரும், கவிஞருமான உருத்திரமூர்த்தி சேரன் அவர்களின் பங்கு முக்கியமானது. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சிறப்பான முறையில் பதிவு வெளிப்படுத்தப்பட்டதற்கு ஆலோசனைக்குழுவை பாராட்டலாம்.
2021 ஏப்ரல் 25 இல் நடைபெறவிருக்கும் 93 வது ஒஸ்கார் திரைப்பட விழாவுக்கு கனடாவின் சிறந்த பிறமொழிப்படம் என்ற வகையில் ஒஸ்காருக்கு Funny Boy பரிந்துரைக்கப்படுகிறது.
“Funny Boy” திரைப்படத்தில் சரியான இலங்கைத் தமிழ் உச்சரிப்பு அமையவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த குறைகள் பெருமளவில் சரிசெய்யப்பட்டுள்ளன என்பதை திரைப்படம் பார்த்தபொழுது அறியக்கூடியதாக இருந்தது. 50% தமிழிலும் மிகுதி ஆங்கிலத்திலும் அமைந்த இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் திகதி (2020) கனடாவில் சி.பீ.சீ. (C.B.C)தொலைக்காட்சி ஜெம் (premiere on CBC Gem) மூலமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது.
டிசம்பர் 10 முதல் நெட்ஃப்ளிக்ஸ் மூலமாகவும் வெளியிடப்பட இருக்கிறது.
இலங்கையில் நடந்த இனவழிப்பில் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்த படம் அதே வாசகத்துடனேயே முடிவடைகின்றது.
இந்த படத்தை பார்க்கும் இலங்கையர்களுக்கு சில மொழி உச்சரிப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகிய மன கசப்புகள் இருந்தாலும், இதை பார்க்கும் பிறமொழி மக்களுக்கும், எமது அடுத்துவரும் சந்ததியினருக்கும் ஒருபாலினத்தவரின் கதையுடன் தமிழர்களுக்கு இலங்கையில் நடந்த கொடுமையை எடுத்துசொல்லும் படமாகவே இது இருக்கும்.