27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கும் நபர் – கனடாவிலேயே பெரிய ‘தலக்கட்டு’ குடும்பம் இது தான்.
தனது தந்தை வின்ஸ்டன் பிளாக்மோர், அக்கா, தங்கைகளான 3 பேரை மணம் முடித்திருப்பதாகவும், இதே போல அக்கா – தங்கைகளாக 4 ஜோடிகளை தனது தந்தை மணம் முடித்திருப்பதாகவும் வின்ஸ்டன் பிளாக்மோர் தெரிவித்தார்.

ஒரு கணவன் அல்லது மனைவி கூடவே நிம்மதியாக வாழ முடிவதில்லையே என புழம்பித் தள்ளுபவர்கள் கனடாவின் Winston Blackmore குறித்து அறிந்தால் அதிர்ந்து தான் போவார்கள். ஆம் 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஒரு வகையில் ஒரு உலக அதிசயமே.
போட்டி, சண்டை, சச்சரவுகள் போன்றவை கூட்டுக் குடும்பங்களுள் எழும் சகஜமான ஒன்று. ஆனால் அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள் என 150 சகோதர, சகோதரிகள் ஒன்றாக வாழும் வீட்டில் நிலைமை என்னவாக இருக்கும்? கற்பனைக்கு எட்டாத இவ்வாறான ஒரு குடும்பத்தின் சூழல், வாழ்க்கை முறை என்னவாக இருக்கும் என அக்குடும்பத்தில் வாழும் ஒருவர் டிக் டாக்கில் வீடியோவாக பதிவிட்டிருப்பது வைரலாக பரவி வருகிறது.
கனடாவின் பிரிட்டிங் கொலம்பியா மாகாணத்தில் பவுண்டிஃபுல் பகுதியில் வாழ்ந்து வருபவர் 64 வயதாகும் வின்ஸ்டன் பிளாக்மோர் (Winston Blackmore) இவருக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள், இவரின் குடும்பம் தான் கனடாவின் பெரிய பிரம்மாண்ட குடும்பமாக கருதப்படுகிறது.

இதுவரை வெளி உலகுக்கு தெரியாத வின்ஸ்டன் பிளாக்மோரின் குடும்பம் குறித்து அவரின் மகனும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான 19 வயதாகும் மெர்லின் பிளாக்மோர் தான் டிக் டாக்கில் தனது குடும்பத்தினர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை புகைப்படங்களுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இவர்கள் அனைவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தங்களின் தாயை ஆங்கிலத்தில் “mum” என்றும் தந்தையின் பிற மனைவியர்களை “Mother” என அவர்களின் பெயரையும் குறிப்பிட்டு அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களின் வீடானது கம்யூனிட்டி என்றழைக்கப்படும் வீடுகள் அடங்கிய தொகுப்பாக இருக்கும் எனவும் ஒவ்வொரு வீடும் மேல் தளத்துடன் கூடியது எனவும் ஒவ்வொரு வீட்டிலும் மேல் தளத்தில் ஒரு தாயாரும் அவரின் குழந்தைகளும், கீழ் தளத்தில் ஒரு தாயாரும் அவரின் குழந்தைகளும் என வசித்து வருகிறார்களாம்.
தனது தந்தையின் 27 மனைவிகளில் 22 பேருக்கு மட்டுமே அவருடன் குழந்தைகள் இருப்பதாகவும் மெர்லின் பிளாக்மோர் தெரிவித்தார்.
பிற சகோதர, சகோதரிகளை போல நாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை மாறாக நாங்கள் ஒவ்வொருவரும் பாசமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதில் சுவாரஸ்யமான தகவலாக தனது தந்தை வின்ஸ்டன் பிளாக்மோர் திருமணம் செய்த 27 பெண்களில், அக்கா – தங்கைகள் ஜோடி மட்டும் 4 இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த 3 சகோதரிகளையும் தனது தந்தை திருமணம் செய்திருப்பதாக அவரின் மகன் தெரிவித்தார்.
இதில் மேலும் சுவாரஸ்யமாக அவர் கூறுகையில், ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்ததாகவும், அவர்கள் 12 பேருக்குமே “M” என ஆங்கிலத்தில் தொடங்கும் வார்த்தையில் தான் பெயர் வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். வின்ஸ்டன் பிறந்த அதே நாளில் அவரின் மாற்றாந்தாய்கள் இருவர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை இவர்களே விவசாயம் செய்து அறுவடை செய்வதாகவும், விவசாய நிலங்களில் இவர்கள் அனைவருமே வேலை செய்வோம் எனவும் தெரிவித்தார்.