Reading Time: < 1 minute

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோ 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்று நோயாளர்கள் என்ற கடுமையான மைல் கல்லை எட்டியதாக மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான தரவுகளின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 3 இலட்சத்து 816 ஆக பதிவாகியுள்ளது. இவா்களின் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 344 பேர் குணமடைந்துள்ளனர். 6,980 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையான கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாகாணத்தில் 49,185 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இவற்றின் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் வீதம் 2.4 சதவீதமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.

அத்துடன், ஒன்ராறியோவில் கடந்த 7 நாட்களில் பதிவான தினசரி சராசரி தொற்று நோயாளர் தொகை 1,031 உள்ளது.

நேற்று அதிகளவாக 259 தொற்று நோயாளர்கள் ரொரண்டோவில் உறுதிப்படுத்தப்பட்டனர்.

பீல் பிராந்தியத்தில் – 201, யோர்க் பிராந்தியத்தில் – 86, வாட்டர்லூ -60, ஹால்டன் பிராந்தியம் மற்றும் ஹாமில்டனில் முறையே 47 மற்றும் 45 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

தற்போது தொற்று நோயுடன் 627 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவா்களின் 289 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 185 பேர் வென்டிலேட்டரில் உள்ளனர்.

இதற்கிடையில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட B .1.1.7 புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் 20 பேர் நேற்று மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். இவற்றுடன், பிரிட்டன் புதிய திரிபு தொற்றுக்குள்ளாகி ஒன்ராறியோவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டர்களின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் பரவும் B.1.351 புதிய திரிபு தொற்றுக்குள்ளான மேலும் இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டநிலையில் இவ்வகை திரிவு தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பிரேசில் புதிய திரிவு B.1 தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வகை திரிபு தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக பதிவாகியுள்ளது.

குறைந்தது 262,103 ஒன்ராறியர்கள் இதுவரை கோவிட்19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

டிசம்பரில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியதில் இருந்து மாகாணத்தில் மொத்தம் 687,271 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை 19,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது எனவும் மாகாணா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.