இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பிரபல ‘ஆனந்தவிகடன்’ வார இதழை வெளியிட்டுவரும் விகடன் குழுமத்தின் சார்பில் தமிழில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, புதினங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் இன்று வெளியான ஆனந்தவிகடன் இதழில் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, சேரன் எழுதிய ’அஞர்’ கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
விருதுக்கான குறிப்பில், ” ‘காலற்றவளின் / ஒரு கையில் குழந்தை / மறுகையில் கணவனின் துண்டிக்கப்பட்ட தலை / தொடைகளுக்கு இடையில் / வன்புணரும் படையாளின் துர்க்கனவு’ என வரிகளில் வலி கடத்தும் சேரன், ‘அஞரி’ன் வழியே கோடிக்கணக்கான தமிழர்களின் வாதையைப் பதிவுசெய்திருக்கிறார்.
லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாதைகளை, கோபங்களை, ஆற்றாமைகளை, நினைவுகளைக் கவிதைமொழியாக்கினால் அதுதான் ‘அஞர்.’ 1980-களில் எழுதத் தொடங்கிய சேரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இது. போரின் துயரை முன்வைத்து வாழ்வின் மீதான வேட்கையை அதிகரிக்கச் செய்கின்றன இக்கவிதைகள். `நெஞ்சே நினை. நினைவிலிக்கு வாழ்வில்லை’ என ஈழப் போர் இழப்புகளின் சாட்சியமாய் உலகின்முன் வைக்கப்பட்டிருக்கும் அஞர் கவிதைகள் தனித்துவமானவை! “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த புதினமாக முத்துநாகு எழுதிய ‘சுளுந்தீ’, சிறந்த சிறுகதைத் தொகுப்பாக கீரனூர் ஜாகிர் ராஜா எழுதிய ’பசீரிஸ்ட்’, சிறந்த கட்டுரைப் புத்தகமாக நக்கீரன் எழுதிய ‘நீர் எழுத்து’ சுற்றுச்சூழல் புத்தகமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
பொங்கலையொட்டி (2020) சென்னையில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும்.