கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகத்துக்கு (CTC) எதிராக கனடாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்றைய தினம் (Feb 4, 2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள், கனேடிய தமிழ் காங்கிரசின் தலைமை விலக்கப்பட வேண்டுமென்றும் அதன் கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் CTC நிர்வாக உறுப்பினர்களின் படங்களுக்கு முட்டைகளால் அடித்து தமது எதிர்ப்பினையும் காட்டியிருந்தனர்.
அத்தோடு, தமிழருக்கான விடிவை தேடித் தரும் கட்டமைப்பான தலைவர் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட கனேடிய தமிழ் காங்கிரஸ் தற்போது தனிப்பட்ட சில பேரின் தலைமைகளால் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களால் தேர்வுசெய்யப்படாத, மக்களை பொது வெளியில் சந்திக்காத ஒரு சிறு குழு, தாங்களே மக்களின் குரல் (Voice of Tamil) என கூறி அரசியல் செய்துவருகின்றது. இவர்களே அண்மையில் இலங்கை சென்று சிங்கள அரசுடனும், இனப்படுகொலை புரிந்த மஹிந்த ராசபக்சவுடனும் நின்று படமெடுத்து, இன நல்லிணக்கம் என கூறி ஹிமாலய பிரகடனம் ஒன்றையும் செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து கனடா மக்கள் மத்தியில் இந்த அமைப்புக்கு எதிராகவும், ஹிமாலய பிரகடனத்துக்கு எதிராகவும் பெரும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.